
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். எனினும், டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அந்நாட்டில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், ஜனவரி 20-ந்தேதி நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்படி, சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல புதிய விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் என கூறி அதற்காகவே நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார். இதேபோன்று, அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கினார்.
இதன்படி, டிரம்ப் தலைமையிலான அரசில் அரசாங்க திறனுக்கான துறை (டி.ஓ.ஜி.இ.) ஒன்று உருவாக்கப்பட்டது. வரி செலுத்தும் மக்களின் பணம் பாதுகாக்கப்படவும், அமெரிக்காவின் கடனை குறைக்கவும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோக தடுப்புக்காகவும், அரசில் வீணடிப்பு மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்திலும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். எனினும், அந்த பதவியில் இருந்து மஸ்க் விலகினார்.
இதன்பின்னர் டிரம்புக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. அது வார்த்தை போராக மாறியது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற பெருமளவு நிதியுதவி செய்தேன் என்றும் ஆனால் டிரம்ப் நன்றி கெட்டவர் என்றும் மஸ்க் கூறினார். ஆனால், அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என பதிலுக்கு டிரம்ப் மிரட்டினார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். எனினும், டிரம்ப் குறித்துதான் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று மஸ்க் கூறினார்.
இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையிலேயே மஸ்க், டிரம்ப் இடையேயான விரிசல் அதிகரித்தது.
டிரம்பின், ஜனாதிபதிக்கான பெரிய அளவிலான வரி மற்றும் செலவு மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அது அமெரிக்காவின் கடனை அதிகரிக்க செய்யும் என்றும் கூறினார். அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்குவேன் என உறுதியாக கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது மஸ்க், புதிய கட்சி பற்றி பேசினார். அதற்கான வாக்கெடுப்பையும் நடத்தினார். மக்களிடம் அதற்கான ஆதரவையும் கோரினார். ஒரு கட்சி ஆட்சியின் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் பதிவிட்டு உள்ளார். இதனால், டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் தன்னுடைய புதிய கட்சியை எந்த அளவுக்கு பயன்படுத்துவார் என பார்ப்பதற்காக அந்நாட்டு மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.