புதுடெல்லி,
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது பலமாக மோதியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரின் டிரைவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சம்சத் தின் ஜபார் என்பவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவ பணியில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வலிமையும், ஆறுதலும் அவர்களுக்கு கிடைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.