
புதுடெல்லி,
அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன்படி, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. கடந்த 5-ந்தேதி அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு கடத்தப்பட்ட 104 பேரில் தலா 33 பேர் அரியானா மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும், 30 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் குடும்பத்தினருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றதாகவும், ஆனால் நாடு கடத்தப்பட்டதால் தங்கள் கனவுகள் சிதைந்து போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மேலும் 119 இந்தியர்களுடன் 2-வது விமானம் இன்று இந்தியாவிற்கு வர உள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். இந்த விமானம் இன்று இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வர உள்ளது.
இதில் சுமார் 100 பேர் பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் குஜராத், உத்தர பிரதேசம், கோவா, மராட்டிய மாநிலம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் 4 பேர் பெண்கள் என்றும், 2 பேர் மைனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 157 இந்தியர்கள் 3-வது விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அந்த விமானம் 16-ந்தேதி(நாளை) இந்தியாவிற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.