அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம்.! உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி!: ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு

7 hours ago 1

கீவ்: போர் நிறுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ பதிவிட்டுள்ளார். ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட மோதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போரில் அமெரிக்காவின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், “நிச்சயமாக, அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நாங்கள் அமெரிக்காவிடமிருந்து பெற்ற அனைத்து ஆதரவிற்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவல் அலுவலக சந்திப்பின் போது போதுமான நன்றியை ஜெலென்ஸ்கி தெரிவிக்கவில்லை என டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர்.

நாங்கள் நன்றியுணர்வை உணராத நாளே இல்லை,” என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார், உக்ரைனின் உயிர்வாழ்வு அதன் நட்பு நாடுகளைச் சார்ந்தது என்றும் அவர் கூறினார். வெள்ளியன்று நடந்த கூட்டம், முதலில் அமெரிக்க – உக்ரைன் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்து, பின்னர் மோதலாக மாறியது. வான்ஸ், ரஷ்யாவுடன் அரசு முறை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தார். அதை ஜெலென்ஸ்கி முற்றிலுமாக நிராகரித்தார். அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால், உக்ரைன் ஏற்கனவே வீழ்ந்திருக்கும் என்று ஜெலென்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார், குறிப்பாக “நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் நன்றியுடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதன் பதற்றம் அதிகரித்ததால், திட்டமிடப்பட்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜெலென்ஸ்கி திட்டமிட்டதை விட முன்னதாகவே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். உக்ரைனின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஒரு முக்கிய கனிம ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்படவில்லை. இந்த சந்திப்பிற்குப் பிறகு, லண்டனில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு உச்சிமாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் ஜெலென்ஸ்கி கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில், வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், “முக்கிய பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அமைதி உண்மையானதாக இருக்க, எங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை” என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின் விளைவு உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கும் அதன் மிக சக்திவாய்ந்த கூட்டாளிக்கும் இடையிலான வெளிப்படையான பிளவை ரஷ்யா வரவேற்றது. அதே நேரத்தில் உலகத் தலைவர்கள் ஜெலென்ஸ்கியின் பின்னால் அணி திரண்டனர். இதனிடையே, 2022 இல் ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து குறைந்தபட்சம் 33 முறை அமெரிக்காவிற்கு ஜெலென்ஸ்கி பகிரங்கமாக நன்றி தெரிவித்திருக்கிறார் என சி.என்.என் உண்மை சரிபார்ப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

The post அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம்.! உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி!: ஜெலென்ஸ்கி வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article