வாஷிங்டன்,
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். 2-வது முறையாக டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளார். கடுமையான குளிர் தாக்கத்தினால், கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற உள்ளரங்கத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
டிரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அப்போது, டிரம்புக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் பீரங்கி குண்டுகள் முழங்கின.
இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதன்பின்னர் டிரம்ப் உரையாற்றினார். அவர் பேசும்போது, அமெரிக்காவின் பொற்காலம் தற்போது முதல் தொடங்கியுள்ளது. இதுவரையில்லாத வகையில், ஒரு வலிமையான அமெரிக்காவை நான் கட்டமைப்பேன். இந்த நாளில் இருந்து அமெரிக்கா செழித்து, வளரும். உலக நாடுகள் முழுவதும் மதிக்கப்படும். அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும் என்றார்.
அவர் தனது உரையின்போது, ஜோ பைடனை தாக்கி பேசினார். இதுபற்றி அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்களை தடுப்பதில் பைடன் அரசு தோல்வியடைந்து விட்டது. எல்லை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை பைடனால் தீர்க்க முடியவில்லை என்றார். அமெரிக்காவில் பல உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டுவேன் என்றும் டிரம்ப் தனது உரையின்போது குறிப்பிட்டார்.