அமெரிக்காவின் தென் எல்லை பகுதிகளில் அவசர நிலை; டிரம்ப் அறிவிப்பு

3 hours ago 2

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, பலம் வாய்ந்த, சுதந்திரம் நிறைந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்னுடைய நோக்கம் என்றார். அவர் தொடர்ந்து, இதற்கு முன்பு எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நொடி முதல் அமெரிக்காவில் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது என கூறிய டிரம்ப், அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

அமெரிக்க எல்லையையொட்டிய மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக பலர் அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகிறார்கள். இதனை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும். சட்டவிரோத வகையில் குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும். உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது. அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

உலக நலனுக்காக கடவுள் அவரை காப்பாற்றினார் என துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி டிரம்ப் குறிப்பிட்டு பேசினார். இந்த சம்பவத்தின்போது, அவருடைய காதில் துப்பாக்கி குண்டு உரசி சென்றது. இதன்பின்னரும், மற்றொரு முறை கோல்ப் விளையாட சென்றபோது, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருந்தும் டிரம்ப் உயிர் தப்பினார்.

அவர் தொடர்ந்து ஆற்றிய உரையின்போது, நாங்கள் பனாமா கால்வாயை மீட்டெடுக்க போகிறோம். நோய்களில் இருந்து குழந்தைகளை காப்போம். அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என்றார்.

இனி மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுடன் கூறினார். அமெரிக்கா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம். நம்முடைய மக்கள் உலகில் மிக சிறந்த குடிமக்கள் ஆவர் என்று டிரம்ப் தன்னுடைய உரையில் பேசியுள்ளார். உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதற்கு நானே சான்று என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article