அமெரிக்காவின் எப்பிஐ தேடி வரும் இந்திய முன்னாள் உளவாளி விகாஸ் எங்கு மறைந்துள்ளார்..? குடும்பத்தினர் பரபரப்பு தகவல்

3 weeks ago 4

பரன்புரா: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொல்ல சதி நடந்ததாக அந்நாட்டு உளவுத்துறையான எப்பிஐ குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பன்னூனை கொல்ல கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டில் இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் முன்னாள் உளவாளி விகாஸ் யாதவ் (39), நிகில் குப்தாவுக்கு உத்தரவுகளை பிறப்பித்தவர் என எப்பிஐ கூறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விகாஸ் யாதவ் தேடப்பட்டு வருகிறார்.

ஆனால் விகாஸ் யாதவ் சிஆர்பிஎப் படையில் வேலைக்கு சேர்ந்து பின்னர் உளவுத்துறையில் பணியாற்றியதாகவும் கடந்த ஆண்டு ஆள் கடத்தல், மிரட்டல் வழக்கில் அவர் டெல்லி சிறப்பு படை போலீசாரால் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இந்தியா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த சம்மந்தமும் இல்லை என இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. தற்போது விகாஸ் யாதவ் எங்கிருக்கிறார், உண்மையிலேயே அவருக்கும் இந்திய அரசுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், விகாஸ் யாதவின் குடும்பத்தினர் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அரியானாவின் பரன்புரா கிராமத்தில் வசித்து வரும் அவரது உறவினர் அவினாஸ் யாதவ் (28) கூறுகையில், ‘‘உளவுத்துறையில் விகாஸ் வேலை பார்த்தது எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி விகாஸ் ஒருமுறை கூட சொன்னதில்லை. 2009ல் சிஆர்பிஎப் படையில் சேர்ந்தார். இப்போது வரையிலும் சிஆர்பிஎப்பில் தான் வேலை பார்க்கிறார் என்றே நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். துணை கமாண்டன்ட் ஆகி விட்டதாகவும், பாராட்ரூப்பராக பயிற்சி செய்து வருவதாகவும் விகாஸ் என்னிடம் கூறி உள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. கடந்த ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையுடன் தான் அவர் வசித்து வந்தார்’’ என்றார்.

மற்றொரு உறவினர் அமித் யாதவ் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தை பாருங்கள். இங்கு யாரும் பணக்காரர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனை ராணுவத்திற்கு அனுப்பும் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டுள்ளோம். உண்மையில் என்ன நடந்தது என்பது விகாசுக்கும், இந்திய அரசுக்கும் மட்டும்தான் தெரியும்? துணை ராணுவ அதிகாரியை இந்திய அரசே கைவிட்டால், எப்படி அடுத்தவர்கள் நாட்டிற்காக ராணுவத்தில் சேர முன்வருவார்கள்? எனவே இந்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எங்கு செல்வது?’’ என்றார். விகாஸ் யாதவ்வின் தந்தை கடந்த 2007ல் இந்திய பாதுகாப்பு படை வீரராக உயிரை விட்டவர். விகாசின் சகோதரர் அரியானா போலீசில் பணியாற்றுகிறார்.

The post அமெரிக்காவின் எப்பிஐ தேடி வரும் இந்திய முன்னாள் உளவாளி விகாஸ் எங்கு மறைந்துள்ளார்..? குடும்பத்தினர் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article