
புதுடெல்லி:
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முதல் நாளிலேயே அதிரடி நடவடிக்கையை தொடங்கினார். அதாவது, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மறுஆய்வு செய்யப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணியாளர்கள் உலகம் முழுவதும் உதவிகள் வழங்குவதை நிறுத்தினர். இந்த முடிவு அமெரிக்காவிடம் இருந்து நிதி உதவி பெற்ற பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் ஜீரோ அவரில் இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது பேசிய அவர், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திடம் (USAID) நிதியுதவி பெற்ற இந்திய அமைப்புகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுபோன்ற பல அமைப்புகள் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் பணிகளை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அந்த அமைப்புகள், அரசாங்கத்தின் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தியதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்ததாகவும், நக்சலிசத்தை ஆதரித்ததாகவும் அவர் கூறினார்.
துபேயின் இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருக்கையில் இருந்து எழுந்து நின்று, துபேயின் கருத்துக்களுக்கு விளக்கம் கேட்பது தொடர்பாக பிரச்சினை எழுப்ப முயன்றனர். ஆனால், அவையை வழிநடத்திய சந்தியா ரே அனுமதி அளிக்கவில்லை. மக்களவையில் அத்தகைய விதிகள் ஜீரோ அவர் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசாங்கங்களை வீழ்த்துவதற்காக மட்டுமே நிதியை செலவழித்த USAID நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூடிவிட்டதாக துபே கூறினார்.
அதன்பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தங்களின் ஆட்சேபனைகளை பதிவு செய்தனர்.