கீவ்: உக்ரைன் போர் குறித்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இருந்து தமது நாட்டை விலக்குவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் மூன்றாவது ஆண்டை எட்டும் நிலையில் உள்ளது. இந்த போரினால் உக்ரைனில் உள்ள பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு இப்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்றுமுன்தினம் பேட்டியளிக்கையில்,‘‘ போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உக்ரைனை விலக்குவது ஆபத்தானது.போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உருவாக்க அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே கூடுதல் விவாதங்கள் தேவை.
டிரம்ப் தனது நிர்வாகம் ரஷ்யாவுடன் மிகவும் தீவிரமான விவாதங்களை நடத்தியதாகக் கூறினார். ஆனால் அதுபற்றி அவர் விவரிக்கவில்லை.அவர்கள் தங்கள் சொந்த உறவுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் நாங்கள் இல்லாமல் உக்ரைனைப் பற்றி பேசுவது அனைவருக்கும் ஆபத்தானது. அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யாவை பேச்சுவார்த்தையில் பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.
The post அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பேச்சில் உக்ரைனை விலக்குவது ஆபத்தானது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து appeared first on Dinakaran.