
வாஷிங்டன்,
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி சுவேதா பன்யம் (வயது 44). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர்.
ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 2017ம் ஆண்டு ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஹர்ஷ்வர்தன் தனது வீட்டில் மனைவி சுவேதா மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு மகன் வெளியே சென்றிருந்த நிலையில் மற்றொரு மகனையும், மனைவியையும் ஹர்ஷ்வர்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு இந்திய தொழிலதிபர் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.