அமெரிக்கா: பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சுஹாஷ் சுப்ரமணியம்

4 months ago 13

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.

இதனை காண்பதற்காக அவருடைய தாயார் நேரில் சென்றார். இதுபற்றி சுப்ரமணியம் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.

இதனை அவரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக, நிச்சயம் கடைசி அல்ல... தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன் என சுப்ரமணியம் கூறினார்.

இவருக்கு முன் துளசி கப்பார்டு (வயது 43), ஹவாய் பகுதியில் இருந்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்து அமெரிக்கராக உள்ளார். சிறு வயதிலேயே இந்து மதத்திற்கு மாறிய கப்பார்டு, அமெரிக்காவின் சக்தி வாய்ந்த தேசிய புலனாய்வு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

119-வது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 4 இந்து உறுப்பினர்கள் உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதார் ஆகியோருடன் சுப்ரமணியமும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் 3-வது பெரிய மத குழுவாக உள்ளனர். முதல் இடத்தில் கிறிஸ்தவர்கள் (461 பேர்), 2-வது இடத்தில் யூதர்கள் (32 பேர்) உள்ளனர். 3 புத்த மத உறுப்பினர்களும் உள்ளனர்.

Read Entire Article