வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுக்கு எதிராக அந்தந்த நாடுகள் விதிக்கும் இறக்குமதி வரிக்கு ஏற்ப பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை கொண்டு வந்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான இந்த பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மட்டும் அதிகபட்சமாக 145 சதவீத வரியை விதித்துள்ள டிரம்ப், சீனாவின் பரஸ்பர வரிக்கும் மட்டும் விலக்கு அளிக்கவில்லை.
இதற்கிடையே, ஸ்மார்ட்போன், லேப்டாப், ப்ளாட் பேனல் டிஸ்பிளே, செமிகண்டக்டர்கள் தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு பரஸ்பர வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் ஏபிசி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘மின்னணு பொருட்களுக்கான வரி விலக்கு என்பது தற்காலிமானது. மின்னணு பொருட்கள் அனைத்து செமிகண்டக்டர் என்ற பிரிவில் வகைப்படுத்தப்படுகின்றன.
இதற்கான சிறப்பு வரி விரைவில் வெளியிடப்படும். அடுத்த ஒரு மாதத்தில் செமிகண்டக்டர் பிரிவில் வரும் பொருட்களுக்கான வரிகள் அமல்படுத்தப்படும். அதே போல மருந்துகளுக்கான சிறப்பு வரி அடுத்த ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்படும். எங்களின் அடிப்படை தேவைகளுக்கு எப்போதும் சீனாவை நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். செமிகண்டக்டர்கள், சிப்கள் அவசியமானவை. இவை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுப்போம்’’ என்றார். சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘ பரஸ்பர வரியை அமெரிக்கா அடியோடு வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.
The post அமெரிக்க வர்த்தக அமைச்சர் அதிர்ச்சி தகவல் மின்னணு பொருட்களுக்கான வரி விலக்கு தற்காலிகமானது: விரைவில் சிறப்பு வரி அமல் appeared first on Dinakaran.