அமெரிக்க போலீசால் தேடப்படும் இந்திய உளவுத்துறை மாஜி அதிகாரி கைது: டெல்லி தனிப்படை போலீஸ் நடவடிக்கை

4 weeks ago 6


புதுடெல்லி: கொலை முயற்சி வழக்கில் அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பால் தேடப்படும் இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், டெல்லியில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, கொலை செய்ய முயற்சித்ததாக, இந்தியாவின் உளவுப் பிரிவு எனப்படும் ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ் மீது கடந்த ஆண்டு அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தது. ஆனால், அதில் விகாஷ் யாதவின் விவரங்கள் வெளியிடப்படாமல், அவர் ‘சிசி-1’ பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் வெளியான மூன்று வாரங்களிலேயே, மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் டெல்லியில் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதாகவும், அதைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக, அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான ‘பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்பிஐ)’ விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், விகாஸ் யாதவின் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ேநாட்டீஸ் ஒட்டியுள்ளது. மேலும் அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடா உடனான மோதல் போக்கு, மேற்கத்திய நாடுகள் உடனான இந்தியாவின் உறவை சிக்கலாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றும் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படும் விகாஷ் யாதவை நேற்று டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டில் இந்திய அரசு ஊழியர் என குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட விகாஷ் யாதவ் இந்திய அரசாங்கத்தில் எவ்வித பதவியிலும் இல்லை. தற்போது வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் கேட்டுள்ளோம்’ என்று கூறினார்.

The post அமெரிக்க போலீசால் தேடப்படும் இந்திய உளவுத்துறை மாஜி அதிகாரி கைது: டெல்லி தனிப்படை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article