புதுடெல்லி: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மீது குற்றம் சாட்டிய விவகாரம் மற்றும் அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுடன் காங்கிரசுக்கு தொடர்பு உள்ளதாக பா.ஜ குற்றம் சாட்டிய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று கூறியதாவது: அதானியை எப்போதும் பா.ஜ காப்பாற்றுகிறது. அதற்காக அவர்கள்எந்த அளவிற்குப் போவார்கள் என்பதைத்தான் நாடாளுமன்ற முடக்கம் காட்டுகிறது.
அதற்காக அமெரிக்க கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு என்ற கதைக்கு பின்னால் பாஜ ஒளிந்துள்ளது. ஜார்ஜ் சோரஸ் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டால், இந்தியாவில் அவரது வணிகம் ஏன் நடக்கிறது. அவரை நாடு கடத்துவதற்கு ஒன்றிய அரசு ஏன் முயற்சி செய்யவில்லை? ஐ.நா. ஜனநாயக நிதிக்கு நீங்கள் ஏன் உதவி செய்கிறீர்கள்? இந்த நிதி உண்மையில் ஜார்ஜ் சோரஸ் அமைப்பு சார்பில் உலகம் முழுவதும் நடக்கும் 68 திட்டங்களுக்கு உதவுகிறது.
கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில் ரூ.7.63 கோடி நிதியை வழங்கியது ஏன்? இதன் மூலம் 4வது பெரிய நன்கொடையாளர்களாக இருப்பது ஏன்? மிக முக்கியமாக, சோரசுக்கு பணம் கொடுக்கும் அத்தகைய நிதியில் நீங்கள் ஏன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்? இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு வகையில் பிரதமர் மோடி, சோரசுக்கு நிதி அளிக்கிறார். 1999ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சோரஸ் இந்தியாவிற்கு வந்தார்.
ஆனால் 2014ம் ஆண்டு தான் அவரது நிதி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. அவரது அமைப்பு சார்பில் நியோகுரோத், கேபிட்டல் புளோட்(தற்ேபாதைய ஆக்ஸியோ) நிறுவனங்களில் அதிக முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் கவுரவ் இந்துஜா, ஷசங்க் ரிஷ்யஸ்ரிங்காவுக்கு ெசாந்தமானவை. அவர்களுடன் மோடி தொடர்பில் இருப்பது ஏன்? மேலும் ஷசங்க் ரிஷ்யஸ்ரிங்கா பாஜவின் முன்னாள் பொருளாளரான வீரேன் ஷாவின் பேத்தியை மணந்தார்.
அவரது தற்போதைய ஆக்ஸியோ நிறுவனம் நாடு முழுவதும் 40,000 வணிகங்களை ஆதரித்துள்ளது. சிறுகுறு நிறுவனங்களில் ரூ.2500 கோடி முதலீடு செய்துள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், சோரஸ் இந்தியாவுக்கு எதிராக இருக்கிறார் என்றால், அவரது நிதியில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் வணிகங்களுக்கு எப்படி பணம் வருகிறது? பாஜவினர் அதானியை காப்பாற்ற சோரஸ் பிரச்னையை எழுப்பி உள்ளனர். இவ்வாறு கூறினார்.
The post அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுக்கு பாஜ நிதி அளிப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.