அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை; மோடி சவுதி பயணம்: நேரம் பார்த்து பஹல்காம் தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியது எப்படி..? உளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் பாதுகாப்பில் பெரும் குளறுபடி

6 hours ago 2

புதுடெல்லி: அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை தந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சவுதி பயணத்திற்கு மத்தியில் பஹல்காம் தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றி உள்ளனர். உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தும் பாதுகாப்பில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள சில பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் தனது பலத்தைக் காட்டும் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் நேரமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். ஜம்மு – காஷ்மீர் பிரச்னையில் சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கவில்லை. சவுதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யை கோபப்படுத்தியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் துப்பாக்கிச் சூடு நடத்தி, இந்திய ராணுவத்தைத் தூண்டிவிடுவதோடு மட்டுமல்லாமல், காஷ்மீர் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, பாகிஸ்தான் சிறப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவல்களுக்கும், கண்ணிவெடிகளை வைப்பதற்கும் தயாராகி வருவதாக உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்திருந்தன. பஹல்காமில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவே பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததற்கான ஆதாரமாகும். கடந்த பத்தாண்டுகளில், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ, தீவிரவாத அமைப்புகள் மீதான கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஐ.எஸ்.ஐ-க்கு கவலை அளிப்பதாக மத்திய உளவு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

இந்தச் சூழலில்தான், காஷ்மீரில் புதிய தீவிரவாதத்தை பாகிஸ்தானின் ஐஎஸ்.ஐ புதிய பிரிவை உருவாக்கி கட்டவிழ்த்து விட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரென பஹல்காமைத் தாக்கியதற்கான அறிகுறிகள் உள்ளன. ஜம்மு பிராந்தியத்தில், சமீபத்திய மாதங்களில் கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் வழியாக குறிப்பிடத்தக்க ஊடுருவல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, அங்கு 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும், அப்போது அவர்களின் பாதுகாப்புக்கு போலீசார் எவரும் அங்கில்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்

  • மும்பை தொடர் குண்டுவெடிப்பில் (1993) 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கு தொடர்பு.
  •  நாடாளுமன்றம் மீதான தீவிரவாதத் தாக்குதலில் (2001) 9 பேர் கொல்லப்பட்டனர்; 18 பேர் காயமடைந்தனர்; ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா கும்பலுக்கு தொடர்பு.
  • குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோயில் மீதான தாக்குதலில் (2002) 33 பேர் கொல்லப்பட்டனர்; 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; லஷ்கர்-இ-தொய்பா கும்பலுக்கு தொடர்பு.
  •  டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் (2005) 62 பேர் கொல்லப்பட்டனர்; 210க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; லஷ்கர்-இ-தொய்பா கும்பலுக்கு தொடர்பு.
  •  மும்பை ரயில் குண்டுவெடிப்பில் (2006) 209 பேர் கொல்லப்பட்டனர்; 714க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; லஷ்கர்-இ-தொய்பா, இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்திற்கு ெதாடர்பு.
  •  ஐதராபாத் கோகுல் சாட் குண்டுவெடிப்பில் (2007) 32 பேர் கொல்லப்பட்டனர்; 47க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இந்தியன் முஜாஹிதீனுக்கு தொடர்பு.
  •  ஐதராபாத் லும்பினி பூங்கா குண்டுவெடிப்பில் (2007) 10 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இந்தியன் முஜாஹிதீனுக்கு தொடர்பு.
  •  மும்பை தீவிரவாத தாக்குதலில் (2008) 173 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; லஷ்கர்-இ-தொய்பா கும்பலுக்கு தொடர்பு.
  •  ஐதராபாத் தில்சுக்நகர் குண்டுவெடிப்பில் (2013) 17 பேர் கொல்லப்பட்டனர்; 126க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இந்திய ஜாஹிதீன் கும்பலுக்கு தொடர்பு.
  •  காஷ்மீர், உரி தாக்குதலில் (2016) 19 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; ஜெய்ஷ்-இ-முகமது கும்பலுக்கு தொடர்பு.
  •  காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் (2019) 40 வீரர்கள் வீரமரணம்; 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; ஜெய்ஷ்-இ-முகமது கும்பலுக்கு தொடர்பு.

The post அமெரிக்க துணை அதிபர் இந்தியா வருகை; மோடி சவுதி பயணம்: நேரம் பார்த்து பஹல்காம் தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியது எப்படி..? உளவுத்துறை எச்சரிக்கை இருந்தும் பாதுகாப்பில் பெரும் குளறுபடி appeared first on Dinakaran.

Read Entire Article