அமெரிக்க அதிபர் தேர்தலில் 2.1 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு

3 weeks ago 5

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்தியாவைப் போல் அல்லாமல் அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு தரப்படும். அதாவது, தேர்தல் நாளில் பயணம் செய்வது, பணிகள் இருப்பது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பவர்கள், முதியவர்கள் முன்கூட்டியே வாக்களித்து முடிக்கலாம்.

இதுவும், நேரில் சென்று வாக்களிக்கலாம், தபால் மூலமாகவும் வாக்கை பதிவு செய்யலாம். இதன் மூலம் தேர்தல் நாளில் சொந்த வேலை காரணமாக யாரும் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படாது. இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், தற்போது முன்கூட்டியே வாக்களிப்பு முறை மூலம் 2.1 கோடி அமெரிக்கர்கள் தங்கள் வாக்கை செலுத்தியிருப்பதாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 78 லட்சம் வாக்குகள் நேரில் வந்தும், 1.33 கோடி வாக்காளர்கள் தபால் மூலமாகவும் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில் இந்திய வம்சாவளிகளும் வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். ஆனால், ஆசிய அமெரிக்கர்களின் முன்கூட்டிய வாக்களிப்பு சதவீதம் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்த்ததை விட அதிகமான குடியரசுக் கட்சியினர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். முன்கூட்டிய வாக்குகளில் நேரில் வந்து வாக்களித்தவர்களில் 41.3 சதவீதம் குடியரசு கட்சியினரும், 33.6 சதவீதம் ஜனநாயக கட்சியினரும் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளில் ஜனநாயக கட்சியினர் 20.4 சதவீதமும், குடியரசு கட்சியினர் 21.2 சதவீதமும் உள்ளனர். பெரிய மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்கள் இப்போதே வாக்கை செலுத்திவிட்டனர்.

* டிரம்ப் ஜெயிக்க மாட்டார்
நியூ ஹாம்ப்சயரில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘நான் பங்கேற்கும் ஒவ்வொரு சர்வதேச கூட்டத்திலும், குறிப்பாக ஜெர்மனியில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு உலக தலைவர்களும் என்னை தனியாக அழைத்துச் சென்று, ‘டிரம்ப்பால் ஜெயிக்க முடியாது. அவர் வெள்ளை மாளிகைக்கு வருவது உலகம் முழுவதும் ஜனநாயக ஆட்சிக்கு ஆபத்து’ என மெதுவாக கூறிச் சென்றார்கள். எனவே டிரம்ப்பை தோற்கடிக்க வேண்டும். அதை நாம் செய்வோம்’’ என்றார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் 2.1 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article