சென்னை,
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் ராகுல்கந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் விசிகவினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பாக் விரைவு ரெயிலை மறித்தும், தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
அதைபோல கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மன்னிப்பு கேள்... மன்னிப்பு கேள்... என்றும் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டபட்டவர்களை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.