சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசினார். இதனால் நாடெங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அகில இந்திய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான தலித் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்து அழைப்பு விடுத்துள்ளன. இத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி வருகிறார்.
அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரசமைப்புச் சட்டம் என்னும் அடித்தளத்தை அமைத்துத் தந்த மாபெரும் தலைவர். அவரை இழிவு படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை இழிவு படுத்துவதற்குச் சமம். அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, 28ம் தேதி (நாளை) சனிக்கிழமையன்று மாலை 4 மணியளவில் சென்னை- வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.