தேனி: ஒற்றை தலைமையின் கீழ் எடப்பாடி சாதித்தது என்ன? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக இணைய வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். டிடிவி.தினகரனும் இதற்கு தயாராகவே இருக்கிறார். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம். அதிமுக ஒன்றிணைய நாங்கள் பதவியை விட்டுக்கொடுத்தோம்.
தர்மயுத்தம் நடத்தியபோது எனக்கு 58 சதவீதம் ஆதரவு இருந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு 4 சதவீதம்தான் ஆதரவு இருந்தது. அதிமுக ஒன்றிணைந்தால் தான் அனைவருக்கும் வாழ்வு, இல்லையேல் அனைவருக்கும் தாழ்வுதான். இந்த பன்னீர்செல்வம் உள்படத்தான். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தெரியும். அப்போது அமித்ஷா வந்திருந்தார். அப்போது அமமுகவை கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் என அமித்ஷா கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அந்த தேர்தலில் 75 இடங்களில்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என உளவுத் துறை கூறுகிறது.
எனவே, அமமுகவை சேர்த்தால் வெற்றி கிடைக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். இதனைகேட்ட அமித்ஷா, இந்த தேர்தலில் நான் கூறினால் டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட மாட்டார். இக்கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 10 வாரியத்தலைவர் பதவி தர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்ததன் விளைவால் அதிமுக ஆட்சி இழந்தது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டீங்களே.
ஒற்றை தலைமை கிடைத்த பின்பு நீங்கள் என்ன சாதித்தீர்கள். சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான். இவ்வாறு அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைய வேண்டும் என நீங்கள் கூறும்போது, அந்த கூட்டணியுடன் சேரக்கூடாது என எடப்பாடி கூறி வருவது, அதிமுக ஒன்றிணைய தடையாக இருக்கிறதா? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஜெயலலிதா பாஜவுடன் கூட்டணியும் வைத்திருக்கிறார். எதிர்த்தும் இருந்திருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலின்போது, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யார் பக்கத்தில் இருந்தார். 4 நாளில் என்ன கொள்கை மாற்றம் வந்துவிட்டது’’ என்றார்.
* செங்கோட்டையனுக்கு ஆதரவு
ஓபிஎஸ் கூறுகையில்,‘எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா, பல்வேறு விவாதத்திற்கு ஆளாகி உள்ளது. செங்கோட்டையன் கட்சிக்கு விசுவாசமானவர். எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். செங்கோட்டையன் மீது எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. செங்கோட்டையன் இன்றைக்கு இருக்கிற அதிமுக தலைவர்களிலேயே மூத்த நிர்வாகி. எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளராக இருந்தது செங்கோட்டையன்தான்.
தலைமைக்கழக நிர்வாகியாக இருந்தார். 9 முறை எம்எல்ஏவாக இருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நானும், செங்கோட்டையனும் இணைந்து கோவை, திருச்சி, மதுரை மாநாடு முன்னின்று நடத்தினோம்’ என்றார். ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை நேரலையில் செங்கோட்டையன் பார்த்ததாகவும், தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
The post அமித்ஷா அப்பவே சொன்னாரு கேட்கல… ஒற்றை தலைமையின் கீழ் எடப்பாடி சாதித்தது என்ன? ஓபிஎஸ் கேள்வி appeared first on Dinakaran.