
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலேசியாவில் நடந்த புரோமோஷன் விழாவில் 'அமரன்' படத்தில் நடித்தது குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'நான் இதுவரை ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததில்லை. 'அமரன்' படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸை சந்தித்து முழுவதுமாக அறிந்துகொண்டேன். 'அமரன்' படத்தில் எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த நடனமும் இல்லை. அது கதைக்கும் தேவைப்படவில்லை,' என்றார்.
'அமரன்' படத்தின் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் பல்லவியின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.