சென்னை,
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. பி.வி.ஆர் ராயப்பேட்டை, பி.வி.ஆர். மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளின் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. விழாவின் நிறைவில் சிறந்த படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'மகாராஜா' படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது 'அமரன்' படத்திற்காக நடிகை சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது.
'மெய்யழகன்' படத்திற்காக 'மக்களுக்கு பிடித்த நடிகர்' என்ற பிரிவில் விருதை அரவிந்த்சாமி வென்றார். 'வேட்டையன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. லப்பர் பந்து படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் தினேஷ் வென்றார். 'வாழை' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பொன்வேல் வென்றார்.
மேலும், இந்த விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கு 'அமரன்' படத்திற்காக வழங்கப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அமரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.