கொச்சி: அப்பாவி மாணவரிடம் ரூ.1,250 வாங்கிக் கொண்டு போலி ‘நீட்’ ஹால் டிக்கெட் வழங்கிய பெண் ஊழியரை கேரளா போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் நேற்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள தைக்காவு அரசு மேல்நிலைப் பள்ளியின் மையத்திலும் நீட் தேர்வு நடந்தது. முன்னதாக திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜித்து என்ற மாணவர், இந்த மையத்திற்கு தனது தாயுடன் வந்திருந்தார். அவர் நெய்யாற்றின்கரையில் உள்ள அக்ஷயா மையத்தில் (கேரள அரசு அனுமதியுடன் இயங்கும் இ-சேவை மையம்) பெற்ற நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை தேர்வு மைய அதிகாரிகளிடம் கொடுத்தார். அவர்கள் ஹால் டிக்கெட்டை பரிசோதித்ததில், அந்த ஹால் டிக்கெட் போலி என்பது தெரியவந்தது.
மேலும் இந்த போலி ஹால் டிக்கெட்டில் ஜித்துவின் பெயர் இருந்தாலும் கூட, சுய-அறிவிப்பு பகுதியில் மற்றொரு மாணவர் அபிராமின் என்பவரின் விவரங்கள் இருந்தன. மேலும், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மார்த்தோமா மேல்நிலைப் பள்ளி என்பது நீட் தேர்வு மையமாக இல்லை என்பதும் தெரியவந்தது. ஆரம்பத்தில் இது அச்சு பிழையாக இருக்கும் என்று நினைத்த தேர்வு மைய அதிகாரிகள், மாணவர் ஜித்துவை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால், உயர்மட்ட விசாரணையில், அபிராம் என்ற மற்றொரு மாணவர் திருவனந்தபுரத்தில் உள்ள வேறொரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவது உறுதியானது.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நீட் தேர்வில் ஹால் டிக்கெட் மோசடி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘போலி ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுதிய பத்தனம்திட்டா மாணவர் ஜித்து மற்றும் அவரது தாயை காவலில் எடுத்து விசாரித்தோம். மாணவர் ஜித்து, தனது ஹால் டிக்கெட்டை அக்ஷயா மையத்திலிருந்து பெற்றதாகக் கூறினார். அதையடுத்து அந்த மையத்தின் ஊழியரிடம் விசாரித்தோம். ஹால் டிக்கெட்டுக்கு விண்ணப்பிக்க 1,250 ரூபாயை ஜித்துவிடம் அக்ஷயா மைய ஊழியர் பெற்றுள்ளார். ஆனால் ஜித்துவின் நீட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யவில்லை.
தேர்வு நெருங்கியதால், மாணவரின் தாய் ஹால் டிக்கெட் கேட்டபோது, அந்த ஊழியர் மற்றொரு மாணவர் (அபிராம்) என்பவரின் ஹால் டிக்கெட்டை திருத்தி, ஜித்துவின் பெயரை மாற்றி வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இவ்விசயத்தில் தேர்வு ஒருங்கிணைப்பாளரின் புகாரின் பேரில் அக்ஷயா மையத்தின் ெபண் ஊழியர் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதியப்பட்டது. மேலும் இந்த பெண் ஊழியர் செய்துள்ள மோசடியை, வேறு மாணவருக்கும் செய்துள்ளாரா? என்பது குறித்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினர்.
The post அப்பாவி மாணவரிடம் ரூ.1,250 வாங்கிக் கொண்டு போலி ‘நீட்’ ஹால் டிக்கெட் வழங்கிய பெண் ஊழியர் கைது: கேரளாவில் நடந்த மோசடியால் பரபரப்பு appeared first on Dinakaran.