அபுதாபியில் மாரத்தான் தொடர் ஓட்டம்: பாரம்பரிய உடையில் ஓடி தமிழக தம்பதியினர் சாதனை

4 months ago 17

அபுதாபி,

அபுதாபியில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி, கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஓடினர். பல பிரிவுகளில் நடந்த இந்த நீண்ட தொலைவு ஓட்டப்போட்டியில் அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் மற்றும் விபின் தாஸ் தம்பதியினர் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடினர்.

மாரத்தான் ஓட்டம் என்றாலே டிசர்ட் - கால்சட்டை அணிந்து ஓடுவது வழக்கம். ஆனால் இவர்கள் வழக்கமான தடகள வீரர்கள் அணியும் உடைகளை தவிர்த்து தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து ஓடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். மொத்தம் 42.2 கிலோ மீட்டர் தொலைவை பாரம்பரிய உடை அணிந்து 4 மணி நேரத்தில் நிறைவு செய்து சாதனை புரிந்தனர். முடிவில் நிறுவனத்தின் சார்பில் தம்பதியினருக்கு பதக்கம் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இது குறித்து லிடியா ஸ்டாலின் தினத்தந்தி நிருபரிடம் கூறுகையில், "தற்காலத்தில் இதுபோன்ற ஓட்டப்போட்டிகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் தங்கள் பாரம்பரியங்களை மறந்து மேற்கத்திய கலாசாரத்திலான உடையை அணிந்து கலந்து கொள்கின்றனர். எனவே நமது தமிழக பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் நீண்ட தொலைவானாலும் நமது பாரம்பரிய உடை அணிந்தபடி ஓடினோம்" என்று தெரிவித்தார்.

Read Entire Article