
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடரில் தற்போது வரை 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தமுறை பல முன்னணி வீரர்கள் அணி மாறியுள்ளதால், எந்த அணி பலமான அணியாக இருக்கும்? எந்தெந்த வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள்? எந்த அணி அதிக வெற்றிகளை குவிக்கும்? என்பது போன்ற பல்வேறு விவாதங்களும் தற்போது சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐதராபாத் அணி மிக எளிதாக ஒரு இன்னிங்சில் 200+ ரன்களை குவித்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களது தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தான். அபிஷேக் மற்றும் ஹெட் ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அந்த அணி மிக எளிதாக ரன்கள் குவிக்கிறது.
இதன் காரணமாக அந்த அணி வீரர்களுக்கு பந்துவீச எதிரணி வீரர்கள் தடுமாறுகிறார்கள். அபிஷேக்-ஹெட் இணை எதிரணிக்கு மிக ஆபத்தான தொடக்க வீரர்களாக திகழ்கிறார்கள். இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான ஆபத்தான தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஜோடிதான் திகழ்வார்கள் என சி.எஸ்.கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் விளையாடியது ஒரு டிரைலர்தான். இனிமேல் அவர்கள் இன்னும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இப்படியே சென்றால் இந்த தொடரின் மிகவும் ஆபத்தான (டேஞ்சரான) தொடக்க ஜோடி இவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஏனெனில், விராட் கோலி வழக்கமாக விளையாடும்போது எதிர்புறம் ஒரு வீரர் வேகமாக விளையாடினால் அவருக்கு ஏற்றவாறு ஸ்ட்ரைக் ரொட்டேஷன் கொடுப்பார். ஆனால், இம்முறை அவரும் அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை தெறிக்க விடுகிறார் என்பதனால் நிச்சயம் இந்த ஜோடி ஆபத்தான ஒரு ஜோடியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.