அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு.. ஜெகதீப் தன்கரின் அறிவிப்பால் மாநிலங்களவையில் பரபரப்பு!!

1 month ago 9

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு இருந்ததாகவும், அதை பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியது மாநிலங்களவையில் புயலை கிளப்பியது. காலையில் மாநிலங்களவை தொடங்கியதும் பேசிய அவை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்றைய கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அபிஷேக் சிங்வி-க்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் 100 நோட்டுகள் அடங்கிய 500 ரூபாய் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். இதுபற்றி விசாரணை நடத்த காவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

அவைத்தலைவரின் வெளிப்படையான குற்றச்சாட்டு காரணமாக மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கைப்பற்ற பணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், உறுப்பினர் பெயரை அவை தலைவர் வெளிப்படையாக குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் பணம் கிடைத்த விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த கோரி முழக்கமிட்டதால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. அமளிக்கு இடையே குறுக்கிட்டு பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, பாஜக எம்.பி.க்களை கூச்சலிடுமாறு அமைச்சரே தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டினார்.

திருச்சி சிவாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரெஜிஜு, பாஜக உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறினார். இதனையடுத்து பாஜக எம்.பி.க்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முழக்கம் எழுப்பியதால் அவையில் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது. இந்நிலையில், தனது இருக்கையில் பண கட்டு கிடந்தது குறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். அவையில் நேற்று 3 நிமிடங்கள் மட்டுமே இருந்ததாக கூறிய அவர்; 1 மணிக்கு அவை நடவடிக்கை முடிந்ததும் உணவகத்தில் மதிய உணவு உட்கொண்ட பிறகு 1.30மணிக்கு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விட்டதாக கூறியிருக்கிறார்.

The post அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு.. ஜெகதீப் தன்கரின் அறிவிப்பால் மாநிலங்களவையில் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article