அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

1 month ago 8

இன்னல்களைத் தீர்ப்பாள் திரிபுரையாள்

“பார்க்கும்‌திசைதொறும்‌பாசாங்குசமும்‌பனிச்சிறைவண்டு
ஆர்க்கும்‌புதுமலர்‌ஐந்தும்‌, கரும்பும், என் அல்லல்‌எல்லாம்‌
தீர்க்கும்‌திரிபுரையாள்‌திரு மேனியும்‌சிற்றிடையும்‌,
வார்க்குங் குமமுலையும்‌, முலைமேல்‌
முத்துமாலையுமே’’.

– எண்பத்தி ஐந்தாவதுஅந்தாதி ஆதியாகஆயுத வடிவில் வழிபாடு செய்வதைப் பற்றிய தகவலையும், உபாசகனுக்கு முக்தி நிலையில் உமையம்மையே அனைத்துமாய் காட்சி அளிப்பதையும் இப்பாடல் சூட்டுகிறது. இதை ஆகமம், ‘அஸ்த்ர பலி’ அல்லது தசாயுத வழிபாடு என்கிறது. இனிப் பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* பார்க்கும் திசைதொறும்
* பாசாங்குசமும்‌ பனிச்சிறைவண்டு ஆர்க்கும்‌புதுமலர்‌ஐந்தும்‌, கரும்பும்
* என் அல்லல் எல்லாம்
* தீர்க்கும்
* திரிபுரையாள்
* திருமேனியும்
* சிற்றிடையும்
* வார்க்குங்கும முலையும்
* முலைமேல் முத்து மாலையுமே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“பார்க்கும் திசைதொறும்’’

என்பதனால் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளும் அஸ்திர தேவியைதிரிசூல வடிவில் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வர். அந்த ஆலயதேவதையை முன் நிறுத்தி ஒவ்வொரு திசையாய் கிழக்கு முதல் பத்து திக்கிற்கும் அந்தந்த திசைக்குரிய தேவதையை அழைத்து உமையம்மையின் கட்டளைகளை தெரிவித்து வணங்குவர். அஸ்திர தேவியின் முன்னாள் அந்த திசையில் பலி பீடம் அமைத்தோ அல்லது கோலமிட்டோ வணங்கி நிகழ்த்தப்படும் இந்த பூசனையை பார்ப்பவளான அஸ்திரதேவியை “பார்க்கும்’’ என்ற வார்த்தையாலும் பூஜிக்கப்படும் திசை தேவதையை “திசைதொறும்’’ என்றும் இரண்டு தேவதைகளையும் இணைத்து ‘`பார்க்கும் திசைதொறும்’’ என்கிறார்.

“பாசாங்குசமும்‌பனிச்சிறைவண்டு
ஆர்க்கும்‌புதுமலர்‌ஐந்தும்‌, கரும்பும்”

“பாசம்’’

என்பது உமையம்மையின் ஓர் ஆயுதம். இதற்கு கயிறு என்பது பொருள். ஆசையை கயிறாக கொண்டவள் உமையம்மை. `ராகஸ் வரூப பாஷாட்யா’ என்ற சகஸ்ர நாமத்தால் அறியலாம். அனைத்து உமையம்மை சிலைவடிவிலும் வலது மேல் கையில் மூன்று புரிகளால் ஆன கயிறு அமைந்திருக்கும் இதையே “பாசம்” என்கிறார்.

“அங்குசம்”

மேற்கண்ட பாசமாகிற கயிறை வெட்டுவதற்கு உதவும் கருவி. இதை கொடிவெட்டி என்று குறிப்பிடுவர். இது கூர்மையான கோடாரியைப் போல் பட்டை விளிம்பு உள்ளதாக இருக்கும். கோடாரி எப்படி மரத்தை வெட்டுமோ அதுபோல் இதுகயிற்றை வெட்டும். சக்தி தத்துவத்தில் கோபம் என்ற குணத்தை குறிப்பிட இவ்வடிவத்தையே பயன்படுத்துகிறார்கள். `க்ரோதா காராங்குசோஜ்ஜ்வலா’ என்கிறது லலிதா சகஸ்ர நாமாவளி. இதையே “அங்குசம்” என்கிறார்.

“பனிச்சிறை’’

என்பது சிறகை குறிக்கும். இந்த சிறகை மன்மதன் சூடியிருப்பார். இது காமக்
களிப்பில் உதிரும் பறவை இறக்கையின் ஒரு சிறு பகுதியாகும். இதை காமம் என்னும் உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சிவபெருமான் மன்மதனை வென்றதால் சூடியிருப்பார். இதை கொக்கிறகு என்பர். சிவகாம சுந்தரியின் மணாளனான நடராஜர் இந்த கொக்கிறகினை தலையில் சூடியிருப்பதை சிற்பத்தில் காணலாம். இதையே “பனிச்சிறை” என்கிறார்.

“வண்டு’’

வண்டை ஐந்து வகை அடையாளமாக சாத்திரம் பயன்படுத்துகிறது. இந்த இடத்தில் காலத்தையும், உடல் பருவத்தையும் சூட்ட இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்
பட்டர். மலர் மலரும் பருவத்தை இந்த வண்டு சூட்டுகிறது. பெண்களின் பூப்படைந்த பருவத்தை சூட்ட வண்டை பயன்படுத்துவர். அந்த வகையிலே தான் பட்டர் உமையம்மைக்குறிய பருவத்தை சூட்டுகின்றார். அதை `யவ்வனாரம்ப ரூடா’ என்கிறது சகஸ்ர நாமம். மன்மதனின் கரும்பு வில்லில் வண்டு நாணாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது புஷ்ப பாணங்களை செலுத்த பயன்படுகிறது. இதையும் ஒரு திக்கில் பூசிப்பர். இவையாவற்றையும் மனதில்கொண்டே “வண்டு” என்கிறார்.

“புதுமலர் ஐந்தும்”

மன்மதனின் கையில் இருக்கும் மலர்க் கொத்தில் உள்ள மலர்க்கணைகளையே இங்கு “புதுமலர்” ஐந்தும் என்கிறார். அவற்றை ஒவ்வொன்றாய் இனிக் காண்போம்.

“புதுமலர்” – தாமரை

என்பது சிவபூசனை செய்ய உதவும் மலர். மேலும் சூரியனின் காதலி என்கிறது சாத்திரம். அந்த பொருளிலேயே இந்த தாமரையானது ஆயுதமாகவும் குறிப்பிடப்படுகிறது. இது நினைவை தூண்டுவது, மானுடர்களுக்கு தீய உணர்வு தோன்றாது அன்பு உணர்வு தோன்ற இந்த மலர் அடையாளமாக பயன் படுகிறது தந்திர சாத்திரம். தாமரையில் இறைவனை வழிபாடு செய்வது நீர்வளத்தை பெருக்கும். விவசாயம் செய்பவர்கள் மன்மதனுக்கு சாற்றி வழிபடுவதையே “புதுமலர்” என்கிறார்.

“புதுமலர்” – மல்லிகை

இதன் வாசனையானது மனதிற்கு மகிழ்ச்சியூட்ட வல்லது. இதில் ஒன்பது வகை மல்லிகையை உமையம்மைக்கு சாற்றி வழிபடுவது என்பது கணவன் மனைவி
யருடன் இருக்கும் மனஸ்தாபத்தை நீக்கி ஒற்றுமையை வளர்க்கும். இதையே இறைவியாக வழிபட்டால் தேவ மங்கையர் ஒன்பதின்மர் மலரில் தோன்றி அருள்புரிவார். பண்டைய காலங்களில் திருமணத்தன்று இந்த தேவதையை மல்லிகைப்பூவிலேயே எழுந்தருளச் செய்வார்கள். இதையே “புதுமலர்” என்கிறார்.

“புதுமலர்” – அல்லி

இரவுப்பொழுதை உணர்த்துவது. காலையில் உழைத்தவர்கள் இரவில் உண்டு மகிழ்வார்கள். இரவு என்பது மன்மதனுக்குரிய சிறுபொழுது இந்த அல்லியை இருதாரம் கொண்ட அனைத்து சுவாமிகளின் தேவியர் கைகளில் ஒன்றில் தாமரையையும், ஒன்றில் அல்லியையும் வடிப்பர். இது அன்பின் குறியீடாகும். அல்லிமலரைக் கொண்டு உமையம்மையை வழிபட்டால் திருமணம் நடக்கும். இதையே “புதுமலர்” என்கிறார்.

“புதுமலர்” – மாம்பூ

வசந்தகாலத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மலரில் உமையம்மையை வழிபாடு செய்தால் எத்தகைய சூழலையும் மகிழ்ச்சியானசூழலாக உருவாக்கும். இதையே “புதுமலர்” என்கிறார்.

“புதுமலர்” – அசோகமலர்

இதில் உமையம்மையை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்தால் துக்கம் நீங்கும். இந்த மரத்தை பெண்கள் காலால் உதைத்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. அவ்வாறு வழிபடுவதால் தன்னை மணக்கும் மணவாளன் தன் மீது அன்பு கொண்டவனாய் இருப்பான். இந்த ஐவகை மலரையும் இணைத்தே “புதுமலர் ஐந்தும்” என்கிறார்.

“கரும்பு’’

இனிப்புச்சுவையுடன் மகிழ்ச்சி உணர்வை தூண்டக் கூடியது. மேலும் மகிழ்ச்சியானது தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கு வழிபடப்படுவது. இதையே இன்றளவும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் சந்தனம், கற்கண்டு இவற்றைக் கொண்டு வருவோரை வரவேற்பதனால் அறியலாம். இதுவரை நாம் கண்ட அனைத்தும் சொற்களாலும் “பாசாங்கும்.. கரும்பும்’’ என்பது வரை உமையம்மையை சுற்றி பத்து திக்கிலும் வைத்து வழிபட வேண்டிய ஆயுதங்களையே இங்கே சூட்டியிருக்கிறார். இதை சாத்திரம் தசாயுத வழிபாடு என்கிறது. தேவதையை சார்ந்து இந்த ஆயுதங்கள் மாறுபடும். அந்த வகையில் உமையம்மைக்குரிய பத்து ஆயுதங்களையே பட்டர் “பாசாங்குசமும்‌பனிச்சிறைவண்டு ஆர்க்கும்‌ புதுமலர்‌ ஐந்தும்‌, கரும்பும்” என்கிறார்.

“என் அல்லல் எல்லாம்”

என்பதனால் அஸ்திர தேவதை அமைந்திருக்கும் முறையை இவ்வரியின் மூலமாக சுட்டிக் காட்டுகிறார். “என்’’ என்பதனால் அபிராமி பட்டரையும், உமையம்மையை வழிபாடு செய்யும் அனைவரையும் குறிப்பிட்டார். “அல்லல்’’ என்பது மனிதனின் பல பிரச்னைகளை ஒரே வார்த்தையால் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல். மானுடர்க்கு இடம், காலம், நிகழ்வு, சார்ந்து உடலில் உள்ள உயிர், அறிவு, ஆன்மா சார்ந்த பிரச்னைகள் அனைத்தையும்ஒரே வார்த்தையால் “அல்லல் எல்லாம்’’என்கிறார்.

“தீர்க்கும்’’

என்பதனால் உமையம்மையின் ரகசிய மந்திரத்தையே குறிப்பிடுகிறார். மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதனால் தேவதையானது மகிழ்ந்து துன்பம் அனைத்தையும் எளிதில் தீர்க்கும் என்பதையே “என் அல்லல் எல்லாம் தீர்க்கும்’’ என்கிறார்.

“திரிபுரையாள்’’

என்பதனால் மூன்று தேவதைகளை குறிப்பிடுகின்றார். ஒன்று அபிராமி, இரண்டு அஸ்திர தேவதை, மூன்று சூழ்ந்துள்ள திசை காப்பு தேவதைகள் இம்மூன்றையும் ஒருங்கிணைந்த ஒரே வார்த்தையால் “திரிபுரையாள்” என்கிறார். வடமொழியில் மூன்று என்ற எண்ணுப்பெயரை “திரி’’ என்பர். “புரம்’’ என்பதற்கு எல்லை, உடல், அடையாளம் என்று மூன்று பொருள். “அள்’’ என்ற பெண் தேவதையை குறிப்பிட்டு “திரிபுரையாள்’’ என்கிறார்.

“திருமேனியும்”

என்பதனால் வீதி புறப்பாட்டில் விழாக்காலத்தில் எழுந்தருளும் நான்கு திருக்கரங்களோடு கூடிய உமையம்மையையே குறிப்பிடுகிறார். மேலும் மனதிலே பதிவு செய்து பயிற்சி செய்யப்படும் ரூப தியானம் என்று ஆகமங்களில் சொல்லப்படுகிற வடிவங்கள் கோயிலில் இறைவன் இறைவி என்று சொல்லப்படுகிற கல்வடிவங்கள் அனைத்துமே உமையம்மையின் இயல்பான வடிவங்கள் ஆகும். இது வணங்குபவனுக்கு இறையருள் அனுபவத்தை கண்டு, கேட்டு, உற்று, உணர எளிமையான சாதனமாக அமைகிறது. இந்த சாதனத்தோடு தொடர்புபடுத்தும் செயல்கள் அனைத்தும் இறைவியோடு தொடர்பு படும் என்ற சாதகனின் நம்பிக்கையினாலும் இறைவியின் அருள், அந்த சூழலோடு அது கொள்ளும் தொடர்பு அப்போது தோன்றும் அனுபவம் அந்த அனுபவத்தையே ‘‘திருமேனியும்’’ என்கிறார்.

“சிற்றிடையும்’’

சாக்த தந்திரத்தை பொறுத்தவரை உமையம்மையை சிறு குழந்தையாகவும் பருவப் பெண்ணாகவும், வயதில்மூத்த பெண்ணாகவும், வணங்குதல் மரபு. திருமணம் ஆவதற்கு முன்பு இமவானின் புதல்வியாகவும் லட்சுமி, சரஸ்வதியை தோழியாகவும் கொண்ட ஏழு வயது சிறுமியான உமையம்மையையே “சிற்றிடையும்” என்று இங்கு குறிப்பிடுகிறார்.

‘பாலா என்ற குழந்தைப் பருவத்தை குறிக்கவே ‘துடியிடை’ (38) என்றும் சிவகாம சுந்தரியை குறிப்பிடவே தயங்கு நுண்ணூல் இடையாளை’ (84) ‘தாயான காளியைக் குறிக்க மெல்லிய நுண்ணிடை’ (91) என்றும் இடையைக் கொண்டு சக்தியின் தன்மையை வகைப்படுத்துகிறார், காலசம்ஹார மூர்த்தியின் சக்தியாகிய பாலாம்பிகையையே இங்கு “சிற்றிடையும்” என்கிறார்.

“வார்க்குங்கும முலையும்’’

பண்டைய காலத்தில் சிறு பெண் குழந்தைகளுக்கு மேலாடை (ரவிக்கை) அணிவிக்கும் வழக்கமில்லை. மாறாக மார்பில் செஞ்சந்தனம் பூசும் வழக்கம் இருந்தது. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவர்களின் மார்பு திறந்திருக்கும், திருமணப்பருவம் எய்திய பெண்களே எப்போதும் மார்கச்சு அணிந்திருப்பர். இந்த நடைமுறையை மனதில் கொண்டே பட்டர் “வார்க்குங்கும முலையும்’’ என்ற சொல்லை மூன்று வகையில் பிரித்து விளக்குகிறார்.

என்பதனால் குழந்தை பருவத்தில் மார்பில் செஞ்சந்தனம் பூசிய சரஸ்வதி லட்சுமியை தோழியாகக் கொண்ட பாலாம்பிகையை குறிப்பிடுகிறார்.என்பதனால் சிவந்த பட்டினால் நெய்யப்பட்ட மார்கச்சை அணிந்தவளான கன்னியான துர்கையை சுட்டுகிறார்.

என்பதனால் பைரவருக்கு பால் கொடுத்ததால் பால் தங்கிய திறந்த மார்பைக் கொண்ட காளி தேவியை குறிப்பிட முலையும் என்கிறார். பாலா, துர்கை மற்றும் காளி என்ற மூவரையும் குறிப்பால் சுட்டவே வார்க்குங்கும முலை என்கிறார்.

பெண்கள் கழுத்தில் ஆபரணம் ஏதும் இல்லாமல் இருக்கக் கூடாது என்பது மரபு. அதன்படி, பெண்கள் அணிகலன்களை அணிந்திருப்பர். உமையம்மையானவள், மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் அம்சமாகவே கருதப்படுகிறாள். இந்த மூன்று சக்திகளும் இயல்பு, குணம், ஆற்றல் போன்றவற்றால் தனித்திருந்தாலும் முத்துமாலையை அணிந்துகொள்வதில் மூவரும் ஒன்றுபோலவே தோன்றுகின்றனர் என்கிறது சிற்ப சாத்திரம். மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் இணைவே சண்டி எனப்படுகிறாள்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Read Entire Article