இந்தியாவின் தலைநகரமாக திகழ்கிறது டெல்லி. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைக்கும் அவலம் என்பது, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம், மேற்கு டெல்லியில் உள்ள நங்லோய் மற்றும் ஜனக்புரி பகுதியில் சோதனை நடந்தது. கூரியர் அலுவலகம் ஒன்றில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.900 கோடி மதிப்பிலான கோகைன் என்னும் போதைப்பொருட்கள் சிக்கியது.
இந்த போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்வதற்காக வைத்திருந்தது, அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதற்கு முன்னதாக இந்திய கடற்படை மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் இணைந்து, குஜராத் கடற்கரையில் சோதனை நடத்தினர். இதில் மெத்தபெட்டமின் என்னும் போதைப்பொருள் 700 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த 8பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மனிதர்களுக்கு எமனாக மாறி நிற்கும் போதைப்பொருட்கள் பயன்பாடு என்பது, உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இது நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் 30கோடி பேர், போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிகரெட்டும், மதுவும் முதலில் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. அதன் பிறகு கஞ்சா, கோகைன், பிரவுன்சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் என்று பல்வேறு போதைப்பொருட்கள் மனிதர்களின் வாழ்வை சீரழிக்கிறது.
இதில் இந்தியாவை பொறுத்தவரை மது, கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்தியாவில் போதைக்கு அடிமையானவர்களில் 62.5 சதவீதம் மக்கள் மதுவை பயன்படுத்துகின்றனர். 8.75சதவீதம் பேர் கஞ்சாவை உபயோகிக்கின்றனர். 0.6சதவீதம் பேர் மயக்க மருந்துகள் அல்லது ஹிப்னாட்டிக்குகளை பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இப்படி போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களில் 26சதவீதம் பேர், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களாக உள்ளனர். இதிலும் இந்தியாவை பொறுத்தவரை புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் உலகளவில் 4வது இடத்தில் இருக்கிறது. உலகின் ஒட்டு மொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் 6மணி நேரத்திற்கு ஒருவர், வாய்ப்புற்று நோயால் இறக்கிறார் என்பதும் ஆய்வுகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.
இளைஞர்களும், தொழிலாளர்களும் போதை பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகி உள்ளனர். களைப்பையும், உடல் வலியையும் தவிர்க்க, இது போன்ற போதை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எளிய தீர்வு என்று நம்புகின்றனர். ஆனால், அதை தொடர்ந்து உண்பதால் முதலில் சளி, இருமல் பாதிப்புகளும், பின்பு கல்லீரல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனால் சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியால் போகிறது.
இது ஒரு கட்டத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். கடைசியில் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகளை சந்தித்து, முடிவில் விரக்தியின் உச்சத்திற்கே செல்வதோடு, உயிருக்கும் உலை வைக்கிறது. இது போன்ற அபாயங்களை, அனைத்து தரப்பு மக்களும் உணரவேண்டும். அதிகாரிகளும், அரசும் இதனை கட்டுப்படுத்தினாலும், அவற்றை உட்கொள்ளக் கூடாது என்ற உணர்வு ஒவ்வொருவரிடமும் உருவாக வேண்டும். இதுமட்டுமே அடுத்தடுத்த சந்ததிகள் சந்திக்க போகும் பெரும் அபாயங்களுக்கு தீர்வாகும் என்பது சமூகநலனில் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கம்.
The post அபாயம் உணர வேண்டும் appeared first on Dinakaran.