கடலூர் : ஆட்டோவில் மூன்று பயணிகளுக்கு மேல் ஏற்றி சென்றால் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட கோரி கடலூர் எஸ்பி அலுவலகத்தில் திரண்ட ஆட்டோ டிரைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதிக்கு 5ம் எண் ஆட்டோக்களை இயக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் நேற்று காலை கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஆட்டோ டிரைவர்களின் முக்கிய நிர்வாகிகளான சுமார் ஐந்து பேரை மட்டும் தனது அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், கடலூரில் இருந்து தவளக்குப்பம் பகுதிக்கு 3 பயணிகளுக்கு மேல் ஏற்றி சென்றால் போக்குவரத்து போலீசார் எங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதனால் எங்கள் தினசரி வருமானம் பாதிக்கப்படுகிறது. ஒரே ஆட்டோ டிரைவருக்கு அடுத்தடுத்த நாட்களில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும், என்று கூறினர்.
இதை கேட்ட எஸ்பி ஜெயக்குமார், உடனடியாக இது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் ஆட்டோ டிரைவர்களிடம் நான்கு பயணிகளை ஏற்றி செல்ல அறிவுரை வழங்கினார். மேலும் ஆட்டோவின் டிரைவர் இருக்கையில் பயணிகளை ஏற்றக்கூடாது.
பயணிகள் வெளியே தெரியும்படி ஏற்றி செல்லக்கூடாது. பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும், என்றார்.இதை ஏற்றுக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் எஸ்பி அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post அபராதம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட கோரி எஸ்பி அலுவலகத்தில் திரண்ட ஆட்டோ டிரைவர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.