தாம்பரம்: மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் வந்து அபராத தொகை கட்ட மறுத்து பெண் டிடிஆருடன் வடமாநில இளைஞர் வாக்குவாதம் செய்தார். ரயில்வே அதிகாரிகளுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று மின்சார ரயில் வந்தது. 3வது நடைமேடையில் வந்து நின்றதும் ரயில்வே பெண் அதிகாரி பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, முதல் வகுப்பு பெட்டியில் இருந்து இறங்கிய வடமாநில இளைஞரிடம் பயணச்சீட்டு கேட்டபோது, அவர் 2ம் வகுப்பு பயணச்சீட்டை காட்டியுள்ளார். அதை பார்த்த பெண் அதிகாரி, முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ததால் அபராத தொகை கட்டும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண் அதிகாரியை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றுள்ளார். அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் இளைஞரை மடக்கி பிடித்தனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இளைஞர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கடுமையாக தாக்கிக்கொண்டு கட்டிப்பிடித்து நடைமேடையில் உருண்டு சண்டைபோட்டனர்.
இந்த சம்பவம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், வடமாநில இளைஞரை மடக்கி பிடித்து ரயில்வே காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இளைஞர் அபராத தொகையை கட்டுவதாக உறுதியளித்து ரயில்வே அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அனுப்பி வைத்தனர். இளைஞர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கடுமையாக தாக்கிக்கொள்வதை அங்கிருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post அபராத தொகை கட்ட மறுத்து வாக்குவாதம்; வடமாநில இளைஞர், பெண் டிடிஆர் மோதல்: அதிகாரிகளுடன் கட்டிபுரண்டு சண்டை appeared first on Dinakaran.