'அன்பைத் தவிர வேறொன்றுமில்லை' சுப்மன் கில்லின் பதிவிற்கு ஹர்திக் கொடுத்த ரியாக்சன்

1 month ago 5

முல்லான்பூர்,

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் போட்ட பின் மும்பை கேப்டான் ஹர்திக் பாண்ட்யா கை கொடுக்க வந்தபோது, குஜராத் கேப்டன் சுப்மன் கில் விலகி சென்றுவிட்டார். அத்துடன் இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தபோது ஹர்திக் பாண்ட்யா, அவரது அருகில் ஓடி வந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் இந்திய அணியின் முன்னணி வீரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே ஈகோ மோதல் உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹர்திக் பாண்ட்யாவுடன் ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இணைத்து 'அன்பைத் தவிர வேறொன்றுமில்லை. இணையத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள்' என்ற வாசகத்துடன் பதிவிட்டார்.

சுப்மன் கில்லின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா 'எப்போதுமே சுப்பு (சுப்மன் கில்) பேபி' என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார். 

Read Entire Article