தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவும், உழவர் பேரியக்க மாநில செயலாளருமான இல.வேலுசாமி, முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் ஆகியோர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ கூறுகையில், ‘சேலம் எம்எல்ஏ அருள், பாமக தலைவர் அன்புமணி பற்றி வேண்டத்தகாத, விரும்பத்தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராமதாசின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடைபிடித்து வருகிறோம். அன்புமணி இல்லை என்றால் அருள் இல்லை. உலகத் தலைவர்களின் பாராட்டை பெற்ற அவரை, அவதூறாக பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்,’ என்றார்.
முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி கூறியதாவது: ராமதாஸ் மூச்சு இருக்கும் வரை, அன்புமணிக்கும், பாமகவுக்கும் நல்ல ஆலோசனை வழங்கும் நபராக, வழிநடத்தும் தலைவராக இருக்க வேண்டும். அன்புமணியை சிறுமைப்படுத்தி, சமூக வலைதளங்களில் சேலம் அருள் எம்எல்ஏ பேசி வருவது, எங்களை வேதனைக்கும், கோபத்துக்கும் ஆளாக்கி இருக்கிறது. பாமகவை உடைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் செய்து விட்டு, வேறொரு கட்சிக்கு தாவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படி பேசி உள்ளார். அருளை நான் தான், ராமதாசிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று, மாணவர் அணியில் பொறுப்பு கொடுத்தார்.
வன்னியர் சங்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து, அருள் இருந்த மாதிரி பேசி இருக்கிறார். மேலும், 18 முறை சிறைக்கு சென்றதாக அப்பட்டமான பொய் சொல்கிறார். எனக்கு தெரிந்து, அவர் ஒரே ஒரு முறை தான் சிறைக்கு சென்றுள்ளார். அருளுக்கு பின்னால், மிக பெரிய சதிக்கூட்டம் உள்ளது. அருள் ஒரு அரசியல் வியாபாரி, அரசியல் தரகர். தர்மபுரி தொகுதியில் சவுமியா தோற்றதற்கு, ஸ்டீல் சதாசிவம் என்பவர் தான் காரணம். இவர் அருளின் தூண்டுதலால், கடந்த 15 நாட்களாக அன்புமணி பற்றி மோசமாக எழுதி வருகிறார். தனக்கும், தன்னுடைய ஆட்களுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று அருள் கூறியுள்ளார். கடந்த 2016ல் அவர் தோட்டத்தில் படுத்திருந்த போது, யாரோ மண்டையை உடைத்ததாக கூறி, ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிக்காரர்கள் இரவோடு இரவாக தன்னை தாக்கி விட்டதாக பேட்டியும் கொடுத்தார். போலீசார் மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்தியதில், அருளின் டிரைவரே அவரை அடிக்க ஏற்பாடு செய்து நாடகமாடியது தெரியவந்தது. எதிர்க்கட்சி மேல் பழி சுமத்துவதற்காக அப்படி நாடகமாடினார். அப்படிப்பட்ட ஒரு வேடதாரி, இன்று அன்புமணி மீதும் நிர்வாகிகள் மீதும் குறை கூறுகிறார் என்றால், இவரே நாளைக்கு ஆட்களை வைத்து அடிக்க சொல்லி, அன்புமணி மீது, அவப்பெயரை உருவாக்க திட்டம் போடுவதற்காக இருக்கும். இதுவரை ராமதாசை சிறுமைப்படுத்தும் வகையில், அன்புமணி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இனியும், அருள் இதுபோல அத்துமீறி பேசினால், உரிய பதிலடியை கண்டிப்பாக தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்பி டாக்டர் செந்தில் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, பாமக தலைவராக இருப்பவர் அன்புமணி. பாமகவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், இந்த மோதலில் சிந்தும் ரத்தத்தை குடித்து வளரும் ஓநாய்களாக இருக்கின்றனர். சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள், தற்போது ஆளுங்கட்சிக்கு துணை போகும் வகையில் பேசியுள்ளார். சமூகத்துக்கு எதிரானவர். அவர் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது பாமக தலைவர் அன்புமணி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
The post அன்புமணி இல்லையென்றால் இன்று அவர் இல்லை: பாமகவை உடைக்க பார்க்கும் அருள் ஒரு அரசியல் வியாபாரி; தர்மபுரி எம்எல்ஏ, மாஜி எம்பி ஆவேசம் appeared first on Dinakaran.