
தமிழகத்தில் இன்று (சித்திரை 1-ந்தேதி) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி" என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள் உருவாகி, தமிழ்நாட்டை அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் அழைத்துச் செல்ல இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம்.
இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும், இன்பமும், இனிமையும் இல்லந்தோறும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.