அன்னூர்,பிப்.23: அன்னூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை புறநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க ரூரல் எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அன்னூர் போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அன்னூர் தாலுக்கா அலுவலருமான சண்முகம் ஆகியோர் இணைந்து அன்னூர் சுற்றுவட்டாரத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த, சோதனையில் கணேசபுரம், எல்லப்பாளையம், மயில்கல், ஆயிம்மா புதூர் பிரிவு, அலிக்காரன் பாளையம் பிரிவு, ஒட்டார்பாளையம் பிரிவு, ஆகிய பகுதியில் உள்ள மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த, சோதனையில் அப்பகுதியில் உள்ள 6 கடைகளில் தடை செய்யப்பட்ட ஸ்வாகத், குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பாக்குகள், புகையிலைகள் விற்பனைக்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அவற்றை கைப்பற்றி 6 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
The post அன்னூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.