சென்னை,
கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப் போட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;
கலைஞர் 100 வினாடிவினா போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் போட்டிக்கு ஏற்பாடு செய்த கனிமொழி எம்.பி.க்கு பாராட்டுகள். பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் தங்கை கனிமொழி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு வாழ்க்கை கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் நம்முடன் இருக்கிறார். தமிழ்நாடும் தமிழ்நாடு மக்களும் கலைஞரை ஆயிரம் ஆண்டுகள் போற்றுவர். அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களை இயற்றியவர் கலைஞர். அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஆளுமையாக கருணாநிதி இருந்தார்.
14 மாதங்களாக திராவிட இயக்க வரலாறு இளம் தலைமுறையினர் நெஞ்சில் விதைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பேரை திராவிட இயக்க வரலாற்றை படிக்க வைத்ததன் மூலம் இந்த போட்டியின் நோக்கம் நிறைவேறியுள்ளது. பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும். உண்மை வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.