அனைத்து துறை அதிகாரிகளுடன் டிஐஜி ஆலோசனை போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம்

1 week ago 3

*ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள முடிவு

புதுச்சேரி : புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என டிஐஜி சத்தியசுந்தரம் கூறினார்.புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் டிஐஜி சத்திய சுந்தரம் தலைமையில் நடந்தது. இதில், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன், போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், எஸ்பிக்கள் செல்வம், மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ்பாபு, பொதுப்பணிதுறை, மின்துறை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டிஐஜி பேசுகையில், போக்குவரத்து நெரிசலுக்கு வாகன பெருக்கம் மட்டும் காரணமல்ல. பல்வேறு துறைகளின் பணிகளும் ஒரு காரணமாக இருக்கிறது. திட்டமிட்டு ஒவ்வொரு துறைகளும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் எல்லோரும் களத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. நமக்குள் ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடல் இருக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகளை முன் கூட்டியே தெரிவித்துவிட்டால், அதற்கேற்ப மாற்று ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு சிரமங்களை குறைக்கலாம்.
பொதுமக்களிடம் நடைபெற்று வரும் பணிகளை முன் கூட்டியே தெரிவிப்பதோடு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காவல்துறை ஒத்துழைப்பு இல்லாவிட்டால் உயரதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

சின்னஞ்சிறிய பகுதியான புதுச்சேரிக்கு நிறைய சுற்றுலாப்பயணிகள் வெளியில் இருந்து வருகிறார்கள். டெல்லியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சில திட்டங்களை, முன்வைத்து வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டது. அதுபோல புதுச்சேரிக்கும் ஒரு சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். டெல்லியை போன்ற நெரிசல், புதுச்சேரியில் இல்லை. எனவே புதுச்சேரியில் திட்டமிட்டு செயல்பட்டால் நெரிசலுக்கு நம்மால் தீர்வு காண முடியும், என்றார்.

மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள், சேதம், ஆகியவற்றை உடனடியாக படம் எடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீசார் தெரியப்படுத்தலாம். நடைபெற்று வரும் பணிகளில், முக்கியமான பணிகளை குறிப்பிட்டு விரைந்து முடிப்பது, சாக்கடை கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட மண்ணை தெருக்களின் ஓரம் குவிக்காமல் உடனே அகற்றுவது, வாடகை இருசக்கர வாகனங்கள் அத்துமீறல், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

The post அனைத்து துறை அதிகாரிகளுடன் டிஐஜி ஆலோசனை போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article