அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீட்டை பெற்று தந்து சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருவது திமுக தான்: விழுப்புரம் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 week ago 3


* திமுக ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினோம்.
* பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து, 18 விழுக்காடாக உயர்த்தினோம்.
* பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம்.
* பிற்படுத்தப்பட்டோரில் 20 விழுக்காட்டைப் பிரித்து வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்து, தனி ஒதுக்கீடு கொடுத்தோம்.
* இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடும் வழங்கினோம்.

விழுப்புரம்: அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீட்டை பெற்று தந்து சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருவது திமுக தான் என்று விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழுப்புரம் வழுதரெட்டியில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ5.70 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு ரூ4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவகம் திறப்பு விழா மற்றும் 35 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணிமண்டபம், நினைவகம் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, ஜெகத்ரட்சகன் எம்பி, அன்னியூர் சிவா எம்எல்ஏ என்னை சந்தித்து ஏஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது திமுக எதிர்க்கட்சி. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நான் சொன்னேன். உறுதி அளித்தேன். இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன். ஏஜிக்கும், திமுகவுக்குமான கொள்கை உறவு ஏற்பட்டதை நினைத்து பார்க்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை தட்டாமல் செய்து முடிப்பதுதான் தான்னுடைய ஒரே வேலை என்று வாழ்ந்த ஏ.ேகாவிந்தசாமிக்கு திமுக அரசு மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும் எனக்கு கிடைத்த வாழ்நாள்பெருமை. அடுத்து, 21 சமூகநீதி போராளிகளுக்கு நினைவுமண்டபம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள் தங்களின் சமூகநீதி உரிமையை கேட்டு அதிமுக ஆட்சி காலத்தில் போராடியபோது, காக்கை குருவிகளை சுடுவதைபோல சுட்டு கொல்லப்பட்டார்கள். 1987ம் ஆண்டு இது நடந்தது.

வன்னிய சமுதாய மக்களின் கோரிக்கைக்கு அன்றைக்கு அதிமுக அரசு செவிமடுக்கவில்லை. 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர், “திமுக ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வோம்’’ என்று வாக்குறுதி கொடுத்தார். சொன்னதுபோல், தலைவர் கலைஞர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43வது நாளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாறுதான் கலைஞருடைய வரலாறு. திமுக ஆட்சியின் வரலாறு. 13.3.1989 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற முடிவாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து, வேலைக்கு சென்று முன்னேற கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடு தான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இது மட்டுமா, உயிர்த் தியாகம் செய்த 21 பேர் குடும்பத்திற்கு ரூ3 லட்சம் கருணைத் தொகையும், மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கியவர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் ரூ3000 பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதிப் போராளிகள் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது நடைபெற்ற சாலை மறியலில் கைதான 2 லட்சம் பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. அதுமட்டுமல்ல, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகளான பு.தா.அருள்மொழி, பு.தா.இளங்கோவன், வாழைச்செல்வன், ஆரணி ராஜேந்திரன், தாராசிங் ஆகிய 5 பேர் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட்டது.

அதேபோல, வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் கலைஞரை சந்தித்து, எஸ்.எஸ். ராமசாமிப் படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, சென்னைக்கு நான் மேயராக இருந்தேன். என்னிடம்தான் அனுப்பி வைத்தார் கலைஞர். சென்னையில் மூன்று இடங்களை குறிப்பிட்டு அவர்கள் என்னிடம் கொடுத்தார்கள். அதற்கு பிறகு முடிவு செய்து, இறுதியாக, சென்னை ஹால்டா சந்திப்பில் ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது. கலைஞரும், மேயராக இருந்த நானும் அந்த விழாவில் கலந்துகொண்டோம். வன்னியர் பொதுச்சொத்து வாரியம் அமைக்கவேண்டும் என்று வன்னியர் சமூகத் தலைவர்கள், முதலமைச்சர் கலைஞரிடம் அன்றைக்கு கோரிக்கை வைத்தார்கள். 2009ம் ஆண்டு அதற்கான ஆணை பிறப்பித்தது திமுக அரசு தான்.

இப்போது, 2021ல் 6வது முறையாக திமுக அரசு அமைந்ததும், 1987ல் சமூகநீதிப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். சொன்னபடியே, இதோ மணிமண்டபம் கட்டித் திறக்கப்பட்டிருக்கிறது. திமுக அரசைப் பொறுத்தவரைக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட சமூகநீதிக்கான இயக்கம். திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலைநாட்டத்தான். 1921ம் ஆண்டே எல்லா சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. இந்த இடஒதுக்கீடு முறைக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது, கடுமையாக போராடி 1950ம் ஆண்டு முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்.

அதுமட்டுமல்ல, திமுக ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினோம். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து, 18 விழுக்காடாக உயர்த்தினோம். பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனியாக இடஒதுக்கீடு வழங்கினோம். பின்னர், பிற்படுத்தப்பட்டோரில் 20 விழுக்காட்டைப் பிரித்து வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்து, தனி ஒதுக்கீடு கொடுத்தோம். இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடும் வழங்கினோம். அதுமட்டுமல்ல, இன்றைக்கு சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் கிடைக்க போராடி வருவது திமுக தான்.இவ்வாறு அவர் பேசினார்.

ரூ882 கோடியில் முடிவுற்ற, திட்டபணிகள் திறப்பு: 35,000 பேருக்கு நலத்திட்ட உதவி
விழுப்புரம் வழுதரெட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மொத்தம் ரூ882 கோடி செலவில் 231 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 35,003 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ரூ424.98 கோடியில் 231 முடிவுற்ற பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ரூ133.30 கோடியில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதேபோல் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 35,003 பயனாளிகளுக்கு ரூ323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாஜ மாநில துணை தலைவர் குடும்பத்துடன் பங்கேற்பு
ஏ.கோவிந்தசாமி சிலையுடன் கூடிய நினைவகம் திறப்பு விழாவில் ஏ.கோவிந்தசாமியின் மகனான பாஜ மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் குடும்பத்துடன் பங்கேற்றார். திமுகவிலிருந்து விலகி தேமுதிகவிற்கு சென்று தற்போது பாஜவில் ஐக்கியமான ஏ.ஜி.சம்பத் மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இனிடையே நேற்று தனது தந்தைக்கு தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நினைவரங்கம் நிகழ்ச்சியில் அவர் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்

மணிமண்டபம் திறப்பு விழாவை புறக்கணித்த பாமக எம்எல்ஏ
விழுப்புரம் வழுதரெட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமார் வந்தார். மணிமண்டபம் திறக்கப்பட்டபோது அங்கு செல்வதை தவிர்த்து கீழே உள்ள இருக்கையில் அமர்ந்தார். அரசுத்துறை அதிகாரிகள் அழைத்தபோதும் மேடைக்கு செல்வதை தவிர்த்த அவர் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மேடைக்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார்.

அப்பா, அப்பா என அழைத்த மாணவிகள்
விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் அரசு நிகழ்ச்சிக்காக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, தான் தங்கியிருந்த அரசு சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டார். அப்போது பெருந்திட்ட வளாகம் முதல் விழா நடைபெறும் இடம் வரை 4 கி.மீ தூரத்திற்கு சாலையோரம் நெடுகிலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ரோடு ஷோவாக நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் அங்கிருந்த மாணவிகள் ‘அப்பா, அப்பா’ என்று பாசத்தோடு அழைத்து ரோஜா பூக்களை நீட்டினர். மாணவிகள் அருகில் சென்று அன்போடு மலர்களை முதல்வர் பெற்றுகொண்டார். அதேபோல், தனியார் கல்லூரி அருகே சென்றபோது அங்கு திரண்டு வரவேற்பு அளித்த மாணவிகளும் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீட்டை பெற்று தந்து சமூக நீதிக்காக இந்திய அளவில் போராடி வருவது திமுக தான்: விழுப்புரம் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article