புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அவர்கள் குழுவில் பங்களிப்பது குறித்து மனசாட்சிபடி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சியை சேர்ந்த 7 பிரதிநிதிகள் குழுவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதில், ஆனந்த் சர்மா, கவுரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகிய 4 பேர் காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், ஆனந்த் சர்மா தவிர சசிதரூர், மணிஷ் திவாரி, அமர்சிங், சல்மான் குர்ஷித் ஆகியோர் குழுவில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தாங்கள் பரிந்துரைத்தவர்களை புறக்கணித்துவிட்டு பரிந்துரைக்காதவர்களை தேர்ந்தெடுத்து பாஜ அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசை பொறுத்த வரை தேச நலன் மிக முக்கியமானது. இனியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை. இதை அரசியலாக்குவதும் பொருத்தமானதில்லை. காங்கிரஸ் யாரையும் தடுக்கவில்லை. பிரதிநிதிகள் குழுவில் உள்ள எங்கள் அனைத்து எம்பிக்களும் பங்களிப்பை வழங்குவார்கள். இந்த விஷயத்தில் அவர்கள், அவரவர் மனசாட்சிப்படி முடிவெடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.
The post அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் ஒன்றிய அரசால் தேர்வானவர்கள் மனசாட்சிபடி முடிவெடுக்கட்டும்: காங். கருத்து appeared first on Dinakaran.