சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள்நலத் திட்டங்கள் எல்லா குடும்பங்களையும் சென்றடைந்து இருக்கின்றது. இதனை அண்மையில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பும் உணர்த்துகிறது. கருத்துக்கணிப்புகளை நாங்கள் நம்புவது கிடையாது என்றாலும்கூட, அதற்கும் ஒரு வலிமை உண்டு எனப் பார்க்க வேண்டும்.
அந்த கருத்துக்கணிப்பிலே, இன்றைக்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்தால்கூட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47% வாக்குகளை வாங்கியிருந்த திமுக கூட்டணி 52% வாக்குகளை பெறும் என்றும், அதிமுக 23%லிருந்து 20%மாக குறையும், என்டிஏ கூட்டணி – 21% எனவும் கருத்துக் கணிப்பில் கூறியிருக்கிறார்கள். முதல்வர் முக.ஸ்டாலின் ஆட்சிக்கு ஆதரவு அலைதான் இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது, Anti incumbency என்கிற எதிர்ப்பு அலை கொஞ்சம்கூட இல்லை.
மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதிமுக இபிஎஸ்சின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த கட்சி கலகலத்து கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலே இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தவர்கள் கூட முதன்முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கியை சேர்ந்துக் கொண்டு வந்தாலும், திமுக கூட்டணியின் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அனைத்து எதிர்கட்சிகளை சேர்த்தாலும் திமுகவுக்கே வாக்கு வங்கி அதிகம் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.