ஸ்ரீமத் அனுமன் ஜெயந்தி லட்சார்ச்சனை மஹோற்சவம், காஞ்சி ஆச்சார்யாளின் அனுக்கிரகத்துடன், 1975-ஆம் வருடம், மயிலாப்பூர் நாட்டு சுப்பராய முதலித்தெரு, மார்வாரி கல்யாண மஹாலில் ஆரம்பிக்கப்பட்டது. விமரிசையாகத் தொடர்ந்த இந்த உற்சவம், 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. 1977-ஆம் வருடம், மார்கழி 15-ஆம் தேதி ஜெயந்தி உற்சவம். உற்சவ தினங்களில், விசேஷ ஹோமங்களும், ஸ்வாமிக்கு லட்சார்ச்சனையும் நடைபெறும்.
பதினைந்து நாட்களும் மாலையில் பிரபல கர்னாடக சங்கீத வித்வான்களின் கச்சேரிகள் நடக்கும். எம்.எல்.வசந்தகுமாரி முதல் பக்திப் பாடகர் வீரமணி வரை பலரும் வந்து, ஒரு பைசாகூட வாங்காமல் பாடிவிட்டுப் போவார்கள். அந்த உற்சவத்தில் அவர்களுக்கு அப்படி ஓர் ஈடுபாடு! அந்த வருடம், யாரேனும் ஒரு பிரபலத்தைக் கொண்டு இன்னிசை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, ஆன்மிகப் பேச்சாளர் ஒருவரை அழைத்து வந்து, அனு மனின் பெருமைகளைப் பற்றிப் பேச வைக்க முடிவு செய்தேன்.
ஆன்மிக நாட்டமுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை ஏற்பாடு செய்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதோடு சிறப்புப் பேச்சாளராக கவியரசு கண்ணதாசனை அழைப்பது என்றும் முடிவானது. எனக்குப் பரம சந்தோஷம். மரியாதை நிமித்தமாக நீதிபதியை ஒரு நாள் மாலை அவரது இல்லத்தில் சந்தித்து விஷயத்தைச் சொன்னோம். “விழா, மயிலாப்பூர்ல எந்தக் கோயில்ல நடக்கப் போவுது?” என்று கேட்டார்.
நான், “எந்தக் கோயில்லயும் நடக்கலே! பிரைவேட்டா ஒரு கல்யாண மஹால்ல பெரிய பந்தலெல்லாம் போட்டு நடக்கிறது!” என்றேன்.“எத்தனை வருஷமா நடத்துறீங்க?” என்று கேட்டார்.“ரெண்டு வருஷமா நடத்திண்டு வர்றோம். இந்த வருஷம் நீங்க வந்து தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கணும்!” என்றேன் நான். நீதிபதி, “சரி… அவசியம் வர்றேன்!” என்று கூறிவிட்டு, “இன்னும் யாரையாவது பேசக் கூப்பிட்டிருக்கீங்களா?” என்று கேட்டார். உடனே நான், “ஒங்கள பாத்தப்புறம் கவி யரசு கண்ணதாசனைச் சிறப்புப் பேச்சாளரா கூப்பிடலாம்னு இருக்கோம்!” என்றேன்.
“பேஷ்… பேஷ்! கண்டிப்பா கூப்டுங்க. நான் தலைமை வகிக்கிறேன்னு சொல்லுங்க. கண்டிப்பா வருவாரு” என மகிழ்ச்சியோடு கூறினார் நீதிபதி. அடுத்து கவியரசு கண்ணதாசனைப் பார்க்க ஆழ்வார்பேட்டை ‘கவிதா’ ஓட்டலுக்குச் சென்றோம். இன்முகத்துடன் வரவேற்றார் கவியரசு. வந்த விஷயத்தைச் சொன்னதும், “மிகவும் மகிழ்ச்சி. அனுமன் ஓர் உயரிய பண்பாளன்.
தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன். அந்த ராமதாசனின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்!” என்றார். மகிழ்வுடன் திரும்பினோம். விழா தொடக்க நாளன்று மாலை சரியாக 6 மணி. விழாப் பந்தலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏகப்பட்ட கூட்டம். முதலில் வந்து இறங்கியவர், நீதிபதி. அதனைத் தொடர்ந்து, கவியரசும் வந்து சேர்ந்தார். அதன் பின், பாடகி எம்.எல்.வசந்தகுமாரி வந்திறங்கினார். அன்றைய முதல் கச்சேரியே அவர்தான். இறை வணக்கப் பாடலுடன் விழா ஆரம்பமானது. அடியேன்தான் வரவேற்புரை.
கையில் ஒரு பெரிய ரோஜாமாலையுடன் மேடை ஏறிய நான், வரவேற்பு உரையை நிகழ்த்திவிட்டு, நீதியரசரை பேச அழைத்தேன். அவர் எழுந்து வந்தார். மாலையை அவர் கழுத்தில் போடுவதற் காகக் கைகளை உயர்த்தினேன். அவ்வளவுதான்! மாலை போடவிடாமல், தலையை நகர்த்திய நீதிபதி உரத்த குரலில், “நீதி தலை வணங்காது! எவர் போடும் மாலையையும் ஏற்காது!” என்று கர்ஜித்தார்.
இதைக் கேட்ட ஜனங்கள் ‘படபட’ வென்றுகை தட்டி மகிழ்ந்தனர். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவமானத்தால் கண்களில் நீர் சுரந்தது. மாலையுடன் மேடையை விட்டு இறங்கி, ஸ்வாமிக்கு முன் போய் நின்றேன். தனது பேச்சை முடித்துக்கொண்ட நீதிபதி, சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த கவியரசு கண்ணதாசனை அழைத்துவிட்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தார். கவியரசு மைக்கை நோக்கி நகர்ந்தார். உடனிருந்த அனைவரும் கண்ணதாசனுக்கு மாலை அணிவிக்குமாறு என்னை வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டு, “நீங்கள் யாராவது போய்ப் போடுங்கோ!” என்றேன். அனைவரும் மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தவே, மாலையுடன் மேடையை நோக்கி ஊர்ந்தேன். நான் வருவதை கவியரசு பார்த்துவிட்டார்.
அவ்வளவுதான்… கிடுகிடுவென்று மேடையை விட்டுக் கீழிறங்கினார். எனக்கு முன்னால் ஒரு குழந்தையைப் போல வந்து நின்று பவ்யமாகத் தலைகுனிந்து “ஆண்டவனின் பிரசாதமான அந்த மாலையைத் தங்கள் திருக்கரங்களால் இந்தக் கழுத்தில் போடுங்கள். பெரிய கொடுப்பினை இன்று எனக்கு!” என நெகிழ்வோடு கூறினார். நான் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மாலையை அவர் கழுத்தில் போட்டேன். இப்போதும் கரவொலி விண்ணைப் பிளந்தது! கவியரசு பேச ஆரம்பித்தார்; “அனுமனின் உயரிய பண்புகளுள் என்னை ஈர்ப்பவை அனுமனின் பணிவும் தொண்டும். பணிவே ஒருவனை உயர்த்தும் என்பதைப் புரிய வைத்தவன் அனுமன்.
அந்தக் குணத்தையே நான் மேன்மேலும் கைக்கொள்ள விரும்புகிறேன்…” என்று பேச ஆரம்பித்து இறுதியில், “பெருமை வாய்ந்த இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியதை வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகிறேன்” என்று முடித்தார். துவக்க விழா முடிந்து, கச்சேரி ஆரம்பமானது. கவியரசு விடைபெற்றார். நீதிபதி என்னிடம் விடைபெற வந்தார். நான் எதையும் காட்டிக் கொள்ளாது முகமலர்ச்சியுடன், “நீங்க விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தது எங்களுக்குப் பெருமை!” என்றேன். உடனே அவர், “நீங்க தப்பா நினைக்கக்கூடாது.
எந்த நிகழ்ச்சியிலேயும் மாலை போட்டுக்கிறது இல்லேங்கறத ஒரு கொள்கையா வெச்சுண்டிருக்கேன்!” என்றார். பட்டென்று நான் ெசான்னேன், “இதை முன்கூட்டியே நீங்க சொல்லியிருந்தா, நான் மேடையிலே இப்படி தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருக்க மாட்டேன் இல்லியா ஜட்ஜ் சார்!”‘வாஸ்தவம்தான்!’ என்பது போல் தலையாட்டிவிட்டுக் கிளம்பினார், நீதிபதி. மனசைவிட்டு நீங்காமல் பதிந்துவிட்ட நிகழ்ச்சி இது!
(அற்புதங்கள் வளரும்…)
தொகுப்பு: ரமணி அண்ணா
The post அனுமன் மீது பக்திகொண்ட கண்ணதாசன் appeared first on Dinakaran.