அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தேமுதிகவினர் 200 பேர் கைது

4 months ago 10

பூந்தமல்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சதீஷ் தலைமையில் மதுரவாயலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே எல்.கே.சதீஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேமுதிகவினர் பேரணியாக அங்கிருந்து புறப்பட்டு வந்தனர். பேரணியாக வந்தவர்களை துணை ஆணையர் சுப்புலட்சுமி, வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென்று எல்.கே. சுதீஷ் உட்பட தேமுதிகவினர் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தேமுதிகவினர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் வந்து கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்தார். அப்போது கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தார்.

The post அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தேமுதிகவினர் 200 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article