
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் புது மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்குவதற்காக 30 அடி நீளம் குண்டம் தயார் செய்யப்பட்டது. அதன்பின் கம்பம் நடுதல் நடைபெற்றது. விழா நாட்களில் தினந்தோறும் புது மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே 30 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு எடுத்தும் பொங்கல் வைக்கும் சாமிக்கு படைத்தனர். சிறுவர் சிறுமியர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதால் அவர்களுக்கு எந்தவித நோய்களும் வராது என்பது ஐதீகம். இதுதவிர சில பக்தர்கள் கோவிலை சுற்றி அடியளந்து வந்தனர். ஆண்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.