அந்தந்த மாதத்தில் உணவு, பயணப்படி குழந்தை பேறு சிகிச்சை பெறும் பெண்காவலர்களுக்கு பணி நேரம் மாற்றி அமைப்பு

5 hours ago 4

*மனம் திறந்து நிகழ்ச்சி கோரிக்கையை ஏற்று எஸ்.பி. உத்தரவு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போலீசாருக்கான மனம் திறந்து நிகழ்ச்சி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.குமரி மாவட்டத்தில் குற்றங்கள், விபத்துக்களை குறைக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பொதுமக்கள் மட்டுமின்றி, காவல் துறையினரின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட மனம் திறந்து நிகழ்ச்சி போலீசார் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காவலர்கள், முதல் நிலை காவலர்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள் உள்பட அனைத்து போலீசாரையும் அழைத்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பது மனம் திறந்து நிகழ்ச்சி ஆகும்.

தினமும் காலை 11 மணிக்கு போலீசாரை எஸ்.பி. சந்திக்கிறார். குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு (விடுமுறை நாட்கள் தவிர) 15 போலீசார் வீதம் சந்திக்கிறார். காவல் நிலைய பணிகளில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், காவலர்களின் குடும்ப சூழ்நிலைகள், காவலர்களுக்கு சரியான முறையில் விடுப்பு, காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் செய்த சிறந்த பணிகள், காவல் மக்கள் பணியை மேம்படுத்த காவலர்களிடம் இருக்கும் யோசனைகள், காவல் துறை செயல்பாடுகளை மேம்படுத்த செய்ய வேண்டியவை குறித்த கருத்துக்கள் என பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்படும்.

போலீசார் நீண்ட நேரம் நின்று பணியாற்றுவதன் காரணமாக அவர்களுக்கு வெரிகோஸ் நோய் பாதிப்பு உள்ளதை மனம் திறந்து நிகழ்ச்சி மூலம் அறிந்த எஸ்.பி. சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன் மூலம் இதுவரை 40க்கும் மேற்பட்ட போலீசாருக்கு இந்த பாதிப்பை சரி செய்யும் வகையிலான சுருக்கு வெரிகோஸ் வெயின் காலுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மனம் திறந்து திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை சுமார் 500 போலீசாரை எஸ்பி நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதன் மூலம் மூன்று வருட காவல் நிலைய பொது மாறுதல் மற்றும் ஆயுதப்படையில் இருந்து கவுன்சிலிங் முறையில் காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் போன்றவை செயல்படுத்தப்பட்டது. குழந்தை பேறு சிகிச்சை பெறக் கூடிய காவலர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். உணவுப்படி, பயணப்படி, மிக நேர ஊதியப்படி ஆகியவை அந்தந்த மாதங்களிலேயே பெறக்கூடிய வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கணவன் மற்றும் மனைவி காவல் துறையில் பணியாற்றினால் ஒரே நாளில் வார விடுப்பு வழங்குதல், அனைத்து காவலர்களுக்கும் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு என பல்வேறு குறைகளை இதன் மூலம் எஸ்.பி. ஸ்டாலின் நிவர்த்தி செய்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் போலீசார் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளன.

நேர்மையுடன் பணியாற்றுங்கள்

மனம் திறந்து நிகழ்ச்சிகளில் பேசிய எஸ்.பி. ஸ்டாலின், காவல் துறையினரின் குறைகள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் தீர்க்கப்படும். மாவட்ட அளவில் உள்ள பிரச்னைகள் உடனே சரி செய்யப்படும். தினமும் காலை 11 மணிக்கு என்னை நேரடியாக சந்தித்து பேசலாம்.

முன் அனுமதி எதுவும் தேவையில்லை. போலீசாரின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் போலீசார் தங்களது பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் பாரட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மை தவறாமல் பணியாற்றுவது தான் காவல் துறைக்கு நீங்கள் அளிக்கும் வெகுமதி ஆகும் என்றார்.

2 ஆயிரம் குழந்தைகள் கண்காணிப்பு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிமிர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் பட்டியலை பள்ளி கல்வித்துறை மூலம் பெற்று, அவர்களின் இல்லங்களுக்கு தினசரி நேடியாக சென்று காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள். அந்த வகையில் சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் தற்போது போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இந்த திட்டமும் எஸ்.பி. ஸ்டாலினுக்கு பாராட்டை பெற்று கொடுத்துள்ளது.

The post அந்தந்த மாதத்தில் உணவு, பயணப்படி குழந்தை பேறு சிகிச்சை பெறும் பெண்காவலர்களுக்கு பணி நேரம் மாற்றி அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article