மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ரிஷப் பண்டை விட சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போல ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமையை கொண்டுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதற்கு கொஞ்சம் பொறுப்புடன் விளையாடுவது மட்டும் அவசியம் என்று ரெய்னா கூறியுள்ளார். அந்த எண்ணத்துடன் நங்கூரமாக நின்று விளையாடினால் அவரால் பெரிய ரன்கள் குவித்து இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக செயல்பட முடியும் என்றும் ரெய்னா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: "ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளார். அவருக்கு கொஞ்சம் பொறுப்பு அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் இது ஒருநாள் தொடர். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடர் அவருக்கு நல்ல வாய்ப்பு. அதில் ஜெய்ஸ்வால் ஆடும் அணியில் வாய்ப்பு பெறவில்லையெனில் ரிஷப் பண்ட் முக்கிய வேலையை பெறுவார். 4வது இடத்திலும் பாண்ட்யாவுக்கு முன்பாகவும் களமிறங்கி அவரால் அசத்த முடியும்.
40 - 50 பந்துகளை எதிர்கொண்டு விளையாடினால் அவரால் போட்டியை பினிஷிங் செய்ய முடியும். 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டால் என்னால் 80 - 100 ரன்களை அடிக்க முடியும் என்று தமக்கு தாமே அவர் சொல்லிக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதில் சொதப்பினால் நிறைய பாதிப்பு ஏற்படும். மற்றபடி அந்த திறமையை கொண்டுள்ள அவர் இந்திய அணியின் துருப்புச்சீட்டு வீரராக செயல்படும் தன்மையைக் கொண்டுள்ளார்" என்று கூறினார்.