சென்னை: ’அந்த தியாகி யார்?’ என்ற பேட்ஜ் அணிந்து, பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்ததற்காக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அந்த சஸ்பெண்ட் உத்தரவை பேரவை தலைவர் மு.அப்பாவு திரும்பப் பெற்றார்.
தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘அந்த தியாகி யார்?’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்தும், சில உறுப்பினர்கள் அதனுடன் அதே வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச முயன்றபோது, அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதிக்கவில்லை. இதனால், பேரவையில் கூச்சல் குழப்பமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.