அந்த குதிரை வீரனுக்கு ஒரு வீர வணக்கம்!

8 hours ago 2

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் இருக்கும் பசுமை நிறைந்த பைசரான் புல்வெளி, 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் மயான பூமியாகிவிட்டது. அந்த இடத்துக்கு மோட்டார் வாகனத்தில் பயணப்பட முடியாது. 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும் அல்லது அதற்குரிய கட்டணத்தை கொடுத்து குதிரையில் செல்லவேண்டும். அந்த குதிரையில் சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு, குதிரையோட்டி குதிரையை நடத்தி அழைத்து செல்வார். வயிற்று பிழைப்புக்காக அந்த குதிரையோட்டி தினமும் குறைந்தது 3 முறைகள் செல்வார். அவருக்கு தினக்கூலியாக சராசரி ரூ.300 கிடைக்கும்.

இந்த வருமானத்தை நம்பி அவரது குடும்பமே வாழ்க்கை நடத்தும். இந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று பைன் மரக்காடுகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், ஒரு உள்ளூர் பயங்கரவாதியும் என 4 பேர் கைகளில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் சர்வசாதாரணமாக நடந்துவந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளில் ஆண்களை மட்டும் குறிவைத்து, 'நீ என்ன மதம்?' என்று கேட்டு சுட்டுத்தள்ளினர். இப்படி 26 ஆண்கள் உயிரை நீத்த நிலையில், அதில் ஒருவர் மட்டும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவர் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்து செல்லும் குதிரை ஓட்டி. அவர் பெயர் சையது ஆதில் உசைன் ஷா. அவர் சாகவேண்டிய அவசியமே இல்லை.

வெகுசுலபமாக அங்கிருந்து போயிருக்கலாம். ஆனால் அவர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தபோதே, அவர்களிடம் சென்று சுடாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே துப்பாக்கியை தள்ள முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் அவர் மீது 3 முறை சுட்டு வீரமரணமடைய செய்தனர். அவரை நம்பி அவரது பெற்றோர், மனைவி, 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் இருந்தனர். 28 வயதில் பெரிய குடும்ப சுமையை சுமந்துகொண்டிருந்தார். அவரது மறைவுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க சையது ஆதில் உசைன் ஷா தன்னுடைய இன்னுயிரை கொடுத்திருக்கிறார் என்று புகழஞ்சலி செலுத்தினார்.

இதில் மனதை உருக்கும் நிகழ்வு எதுவென்றால், அவரது குடும்பத்தினர், எங்களது ஆதில் மரணத்துக்காக மட்டும் துயரப்படவில்லை. அவரோடு உயிர்நீத்த 25 பேரின் உயிரிழப்புக்காகவும் வேதனைப்படுகிறோம் என்று சொன்னது அனைவரின் மனதையும் உருக்கியது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸ்காரரோ, ராணுவ வீரரோ இல்லாத நிலையில் தன்னந்தனியாக சையது ஆதில் பயங்கரவாதிகளை எதிர்கொண்டது நிச்சயமாக வீரதீர செயலாகும். அவரது வீரத்தை போற்றும்வகையில் உயரிய விருது கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் குடும்பத்தினருக்கும் மத்திய-மாநில அரசுகள் இழப்பீடு வழங்கி அவரது சொந்தவீட்டு கனவையும் நிறைவேற்றவேண்டும் என்பதே அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

காஷ்மீர் மக்கள் இந்த மனிதாபிமானமற்ற செயலை மிகுந்த கவலையோடு எதிர்த்தனர். உடனடியாக ஸ்ரீநகரில் கடையடைப்பு போராட்டத்தையும் நடத்தினர். அந்த ஊர் பத்திரிகைகள் எல்லாம் இந்த கொடூர சம்பவத்தை கடுமையாக எதிர்த்து, முதல் பக்கத்தை கருப்பு வண்ண பின்னணியில் செய்தி வெளியிட்டிருந்தன. அதேபோல காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களிடம் அம்மாநில மக்கள் கையெடுத்து கும்பிட்டு, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டப்படி தண்ணீர் பாட்டிலை கொடுத்து அனுப்பினர். ஆக பயங்கரவாதத்துக்கு காஷ்மீரில் ஆதரவு இல்லை என்பது மனநிறைவாக இருக்கிறது. 

Read Entire Article