
சென்னை,
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். சமீபத்தில், நாக சைத்தன்யாவுடன் தண்டேல் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனக்கு தேசிய விருது வெல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருப்பதாக சாய்பல்லவி கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எனக்கு தேசிய விருது வெல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. ஏனென்றால், எனக்கு 21வயது இருக்கும்போது என் பாட்டி என்னிடம் ஒரு புடவையை தந்து, அதை என் திருமணத்தில் உடுத்த சொன்னார். அப்போது நான் எந்த படத்திலும் நடிக்ககூடவில்லை.
எனக்கு 23-24 வயது ஆகும்போது 'பிரேமம்' படத்தில் நடித்தேன். அப்போது பெரிய விருதான தேசிய விருது வெல்வேன் என்றும் அதை வென்று அந்த புடவையை அணியலாம் என்றும் நினைத்தேன். அந்த புடவையை அணியும் வரை எனக்கு அந்த அழுத்தம் இருக்கும்' என்றார்.