திருத்தணி:அத்திமாஞ்சேரிபேட்டையில் 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் பாலியல் புகாரில் 3 ஆசிரியர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிப்பேட்டை சுந்தரேசநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பொதட்டூர்பேட்டை இஎஸ்டி நகரைச் சேர்ந்த சேகர் (57) என்பவர் பணியாற்றி வருகிறார்.
அவர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு வந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் திருத்தணி டிஎஸ்பி கந்தன் பள்ளியில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவிகளிடம் ஆசிரியர் சேகர் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர் சேகரை திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் மலர், அவர் மீது பாலியல் சில்மிஷம் வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் என்பவர் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் என்பவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 3வது சம்பவமாக சுந்தரேசநகர் அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெற்றோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
The post அத்திமாஞ்சேரிபேட்டையில் பரபரப்பு 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது: கடந்த 10 நாட்களில் 3 பேர் சிக்கியுள்ளனர் appeared first on Dinakaran.