சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கில், ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டமும் நடத்தினார்.
அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்குள், நேற்று மாலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 'யார் அந்த சார்' என்று கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பாக பேசப்பட்டது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நடத்திய போராட்டத்துக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில், 'சாமானியரின் பிரச்சினை என்று வந்துவிட்டால், அரசியலில் எப்போதும் ஒரு மனிதனின் குரலாக இருக்காது. அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி, பிரச்சினையை கையிலெடுத்து, முக்கியமான கேள்வியை கேட்டதற்கு பாராட்டுக்கள்' என்றார்.