ஆரணி/ மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியில் கடந்த 2016-2021 காலகட்டத்தில் அறநிலைய துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். ஆரணி எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில், 20 சொத்து ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள பி.நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.