கோவை: ரூ.100 கோடி நிலத்தை மோசடியாக விற்றதாக அதிமுக எம்எல்ஏ, பாஜ முன்னாள் மாவட்ட தலைவர், ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது ஒரே குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பில் 7.9 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
அந்த நிலத்தை சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜ கோவை மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்று வருவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காளிகோனாரின் வாரிசுதாரர்கள் திரண்டு நேற்று புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது வாரிசுதாரரான உஷா (43) என்ற பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். இதனிடையே, மாவட்ட கலெக்டருக்கு தமிழ் தெரியுமா? என கேள்வி எழுப்பிய அவர்கள் இந்தியில் சத்தமாக கோரிக்கையை முன் வைத்து வலியுறுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,“சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், கோவை மாவட்ட பாஜ முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீ வாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எங்களை மிரட்டி வருகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து பாஜ பிரமுகர் பாலாஜி உத்தம ராமசாமி நிருபர்களிடம் கூறுகையில்,“நிலம் மோசடி நடந்ததாக கூறப்படும் 1983ம் ஆண்டில் எனக்கு 12 வயது தான் ஆகி இருந்தது. அப்போது நான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். என் மீது அவதூறு பரப்பி வருவதால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போட திட்டமிட்டு உள்ளேன்’’ என்றார். இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை.
The post அதிமுக எம்எல்ஏ, பாஜ பிரமுகர் மீது ரூ.100 கோடி நில மோசடி புகார்: கோவை கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.